தனியார்மயமாதல், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்டவற்றை எதிர்த்து நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் வேலை நிறுத்தம் நேற்று காலை தொடங்கியது. வேலை நிறுத்தின் முதல் நாளான நேற்று தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் குறைந்த அளவே பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்கு ஆளாகினர்.
நேற்று சில பேருந்து ஓட்டுநர்கள் மக்கள் சேவைக்காக பேருந்துகளை இயக்க முற்பட்டனர். இந்நிலையில் செஞ்சியில் பேருந்தை இயக்க ஓட்டுநர் ஒருவர் முயன்ற நிலையில் பேருந்தின் முன் தொழிற்சங்க நிர்வாகி விழுந்து முதல்வன் பட பாணியில் போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. ''ஹெலோ பஸ்ஸ நிறுத்துப்பா...'' என தொழிற்சங்க உறுப்பினருடன் பேருந்தை மறித்த அந்த நிர்வாகி இறுதியாகப் பேருந்தின் முன்புறம் படுத்துக்கொண்டு ''தொழிலாளர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்... தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக'' என முழக்கமிட்டபடி பேருந்தை இயக்கவிடாமல் போராட்டம் செய்தார். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
முன்னதாக, தொழிற்சங்கங்கள் நடத்தும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் பங்குபெறக்கூடாது. அப்படி பங்கு பெற்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை சார்பில் சார்பில் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.