
தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழ் தொண்டாற்றிய கலைஞருக்கு இறுதி நேரத்தில் ஓய்வெடுக்க கடற்கரையில் இடம் ஒதுக்கி கொடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நக்கீரனுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
பிஆர்.பாண்டியன் கூறியதாவது... 80 ஆண்டுகள் தமிழுக்காகவும் இந்தியாவுக்காவும் தொண்டாற்றியவர் தலைவர் கலைஞர். ஒரு அரசியல் கட்சிக்கு தொடர்ந்து 50 ஆண்டுகள் தலைவராக இருந்துள்ளார். 5 முறை முதலமைச்சராக இருந்தவர். ஒட்டுமொத்த தமிழர்களின் மனதில் இடம்பிடித்தவர். ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாக திகழ்ந்த தி.மு.க தலைவர் கலைஞரின் இறப்பு, ஒட்டுமொத்த தமிழினத்தின் இழப்பாகவே கருதுகிறேன்.
அப்படியான தலைவருக்கு தமிழக அரசு கடற்கரையில் ஓய்வெடுக்க இடம் ஒதுக்க வேண்டும் என்று அந்த கட்சி முறையாக கடிதம் கொடுத்து அனுமதி கேட்டுள்ளது. ஆனால் கடைசி நேரத்தில் இடமில்லை என்று சொல்றது. தமிழக அரசின் இந்த பதில் தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான செயலாக தெரிகிறது. அதனால் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தி.மு.க தலைவர் கலைஞர் கடற்கரையில் ஓய்வெடுக்க இடம் கொடுத்து அனுமதி அளிக்க வேண்டும். அனுமதி மறுத்து ஆங்காங்கே சட்ட ஒழுங்கு பிரச்சனைகளுக்கு வழிவகுக்க வேண்டாம் என்றார்.