நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் கர்நாடகாவில் 130 தியேட்டர்களில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினி பேசியதால், காலா படத்தை கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என்று கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காலா படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், நேற்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த், காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினிகாந்த் தெரிவிக்க வேண்டும், காவிரி விவகாரத்தில் இரு மாநில அரசுகள் - விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஜினிகாந்த் கூற வேண்டும் என நிபந்தனை விதித்தார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தபோது,
காவிரி ஆணையம் அமைக்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பு பற்றி நான் கூறியதில் என்ன தவறு உள்ளது. காவிரி பிரச்சனைக்காக கர்நாடகாவில் காலா படத்தை எதிர்ப்பது சரியல்ல, இதை புரிந்து கொள்ள வேண்டும்.
காலா எதிர்ப்புக்கு கன்னட திரைப்பட வர்த்தக சபையே உறுதுணையாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. படத்தை பிரச்சனையின்றி வெளியிடுவது தான் வர்த்தக சபையின் வேலை, வர்த்தக சபை தடை விதிப்பது சரியல்ல. காலா பட விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம்.
காலாவை கர்நாடகாவில் மட்டும் வீம்புக்காக ரிலீஸ் செய்யவில்லை; உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறோம். காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நம்பிக்கை உள்ளது. கன்னட மக்கள் காலா படத்தை ஆதரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் காலா படத்தை கர்நாடகாவில் சி நிறுவனம் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். மேலும் கர்நாடகாவில் 130 தியேட்டர்களில் வெளியிட திட்டம் இருப்பதாகவும் சி நிறுவன உரிமையாளர் கனகபுரா சீனிவாஸ் அறிவித்துள்ளார்.