Skip to main content

இன்னும் கிடைக்காத கஜாபுயல் நிவாரணம்; ஆதார், ரேசன், வாக்காளர் அட்டைகளை ஆட்சியரிடம் ஒப்படைத்ததால் பரபரப்பு!!

Published on 29/01/2019 | Edited on 29/01/2019

கஜாபுயலால் பாதித்த மக்களுக்கு நிவாரணம் வழங்காத மாவட்ட நிர்வாகத்தையும், அதிமுக அரசையும் கண்டித்து காமேஸ்வரம்  மீனவர்கள்  தங்களின் ஆதார், வாக்காளர், குடும்ப அட்டைகளை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகம் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

kajastrom

 

கஜா புயலடித்து 75 நாட்களை கடந்துவிட்டது. நாகை, திருவாரூர்  மாவட்ட மக்களுக்கு நிவாரணம்  வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். அதனால் தினமும் பல இடத்தில் போராட்டம் நடந்தபடியே  உள்ளது. அந்தவகையில் படகுகள் மற்றும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை  என அனைத்தையும் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க காமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தனர்.

 

kajastrom

 

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட மீனவர்களை நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த  மீனவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறைக்கு எதிராகவும், இதுவரை நிவாரணம் வழங்காத தமிழக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

 

kajastrom

 

"கஜா புயலினால் 200க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்து தொழிலுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறோம். வலைகள், தளவாட பொருட்களின் கணக்கெடுப்பு பணிகள்கூட  இதுவரை நடக்கவில்லை. " என்றனர்.

 

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கஜா புயல் நிவாரணம் வழங்காத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அரசால் வழங்கபட்ட ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டைகளை நாகை வட்டாட்சியர் இளங்கோவனிடம் ஒப்படைத்தனர். கஜா  நிவாரணம் அறிவித்தும் இதுவரை நிவாரணம் வழங்காத தமிழக அரசை கண்டித்து நாகையில் மீனவர்கள் ஆதார், வாக்காளர் உள்ளிட்ட அட்டைகளை ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்