நெல்லை தாமிரபரணிக் கரையோரம் உள்ள கல்லிடைக்குறிச்சியின் பக்கமுள்ள அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகரமுடையார் ஆலயம், சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பாக குலசேகரப்பாண்டியன் மன்னரால் கட்டப்பட்டதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றனர். தங்கத்தாலும், வைரத்தாலும் இளைத்த சிலைகளை, அந்த மன்னர் அங்கே பிரதிஷ்டை செய்தாராம்.
குறிப்பாக இரண்டரை அடி உயரமுள்ள நடராஜர் சிலை ஐம்பொன்னில் வடிவமைக்கப்பட்டது. அதன் தற்போதைய மதிப்பு 30 கோடிகளுக்கும் மேல் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அந்த நடராஜர் 1982- ஆம் ஆண்டு ஏப்ரலில் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. அப்போதைய டிரஸ்டி பாபநாச முதலியார் புகார் செய்தார். இந்நிலையில் விசாரணை நடத்திய கல்லிடைக்குறிச்சிப் போலீசாரின் புலன் விசாரணையில் முன்னேற்றமின்றி இருந்தது.
அதனை தற்போது மறுபடியும் விசாரணைக்கு எடுத்த ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான டீம், சிலை ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டு அங்குள்ள அடிலாய்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பது தெரிய வர ராஜ்ஜிய உறவுகள் மூலம் அதன் அதிகாரிகளான ஜேன்ராபின்சன் மற்றும் ஜேம்ஸ் பென்னட் ஆகியோரிடமிருந்து நடராஜரைப் பெற்றுத் திரும்பிய பொன்மாணிக்கவேல், அதனை முறைப்படி கும்பகோணம் சிலைத் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தினார். பின்னர் இன்று பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் காலை 08.00 மணியளவில் கல்லிடைக்குறிச்சி கொண்டு வந்தனர். இந்து அறநிலையத்துறை நெல்லை மாவட்ட உதவி ஆணையர் சங்கர், கோவிலின் செயல் அலுவலர் வெங்கடேஸ்வரன் அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வசம் ஒப்படைக்கப்பட்ட நடராஜா தரையதிர கல்லிடைக்குறிச்சி நகர் வந்தார்.
ஆலய பட்டார்களின் பூஜைகள், புனஷ்கார தீப ஆராதனைக்குப் பின்பு, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஊர்வலமாக வந்த நடராஜரை ஆண் பெண் பக்தர்கள் ஊரே திரண்டு வந்து ஆனந்தக் கண்ணீரோடு நடராஜரைத் தரிசித்தனர். மேள தாளம் முழங்க காலை 10.15 மணிக்கு கம்பீராக ஆலயப் பிரவேசம் செய்தார் நடராஜர். பின்னர் ஆகம விதிகளின்படி பிரதிஷ்டை செய்யப்படுவார் என்று தெரிகறது.
சிலையை மீட்டு வந்த பொன்மாணிக்கவேல் நிஜ ஹரோவாகத் தெரிந்தார் நகர மக்களுக்கு. அவரைப் பாராட்டிய பொது மக்கள் அவரைத் தெருவெங்கிலும் அழைத்துச் சென்று மரியாதை செலுத்தி, செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஐ.ஜி.பொன் மாணிக்கவேல், நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ள கோவிலுக்கு பாதுகாப்பு கூடுதலாக அளிக்கப்படும். சிலை ஒப்படைப்பது எங்களுடைய பொறுப்பு. ஆன்மீகவாதிகள் சாமி நன்றாக கும்பிட்டதால் சிலை கிடைத்தது. மற்ற மூன்று சிலைகள் கண்டுபிடிப்பது என்னுடைய பொறுப்பு விரைவில் கண்டு பிடிப்பேன். கைதானவர்கள் குறித்து இப்போதைக்கு கூற முடியாது. கல்லிடைக்குறிச்சி கோவில் குறித்த கேள்வி மட்டும் என்னிடம் கேள்வி எழுப்புங்கள். நடராஜர் சிலை பாதுகாப்பு குறித்து குழு அமைக்கப்பட்டுள்ளது அவர்களே முழு பொறுப்பும். நடராஜர் சிலையை பாதுகாக்க பெட்டகம் அமைக்கும் வரை கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும். மீட்கப்பட்ட நடராஜர் சிலை 28 கோடி முதல் 30 கோடி வரை மதிப்புடையது. கோவில் சிலைகளை மீட்பதில் இடையூறு ஏற்படுத்தினால் அவர்கள் ஜெயிலுக்குள் செல்வார்கள். இது வரை யாரும் இடையூறும் இல்லை. சட்டப்படி ஜெயிலுக்குள் தள்ளுவேன் என்று ஆவேசத்துடன் கூறினார் பொன்மாணிக்கவேல்.