கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவேண்டிய பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருள்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக ஊழியர்களும், அவர்களின் உறவினர்களும் வண்டி, வண்டியாக எடுத்து சென்றதை கண்ட ஆத்திரமடைந்த பொதுமக்கள் கிடங்கு மேலாளர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கடந்த நவம்பர் 15 ம் தேதி யாரும் ஏதிர்பார்த்திடாத வகையில் வீசி, பேரழிவை ஏற்படுத்தியது கஜா புயல். இதில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களின் கடலோர தாலுக்காகக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதிலும், வேதாரண்யம், நாகை, கீழ்வேளூர், திருத்துறைப்பூண்டி மிகவும் கடுமையாக பதித்தது. இதையடுத்து தன்னார்வலர்களும், அரசுகளும் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, குடிநீர், மருந்து பொருட்கள், ஆடைகள் என நிவாரணப் பொருட்களை கிடங்குகளில் வைத்து வழங்கினர்.
இதில் நாகை மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து வந்த நிவாரணப் பொருட்களை நாகை வெளிப்பாளையம், பனங்குடி ஆகிய ஊர்களில் உள்ள சேமிப்பு கிடங்குகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகங்களில் சேமித்து வைத்து புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு லாரிகள் மூலம் சிறுக,சிறுக அனுப்பி வைத்தனர். ஆனால் பெரும்பாலான கிராமங்களுக்கு கஜா புயல் நிவாரண பொருட்கள் சென்றுசேரவில்லை என பொதுமக்களும், அரசியல் கட்சிகளும், போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
நாகை, கீழ்வேளூர் ஒன்றியங்களில் உள்ள பெரும்பாலான கிராமங்களுக்கு நிவாரண பொருட்கள் வரவில்லை என பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபட்டனர். அதோடு போஸ்டர்களும் ஒட்டி எதிர்ப்பை பதிவு செய்தனர். அவ்வப்போது அதிகாரிகள் வந்து சமாதானம் பேசி அனைவருக்கும் கண்டிப்பாக வழங்கப்படும், குடோனில் இருப்பு உள்ளது, கணக்கெடுப்பு நடக்கிறது, முடிந்ததும் கொடுக்கிறோம் என உத்தரவாதம் அளித்தபடியே தப்பித்துவந்தனர்.
இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் பல கிராமங்களில் கஜா புயல் நிவாரண பொருட்கள் முழுமையாக வழங்கப்படாமலேயே நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் 25ம் தேதி மாலை வெளிப்பாளையம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்புக் கிடங்கில் பணிபுரியும், ஊழியர்களும் அவர்களது உறவினர்களும் தமிழக அரசின் நிவாரண பொருட்கள் அடங்கிய அட்டை பெட்டிகள் மற்றும் அரிசி பருப்பு எண்ணெய், உள்ளிட்ட பொருட்களை பைக்குகளில் எடுத்துச் சென்றுள்ளனர்.
இதை அருகில் இருந்த பொதுமக்களுக்கு தெரிந்து, நம்பியார் நகர் மீனவப் பெண்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்குக்கு தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களும் நம்பியார் நகர் மீனவர்களும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு பொறுப்பாளர்களிடம் கேட்டனர், உயர் அதிகாரிகள் உத்தரவு பேரில்தான் நிவாரணப் பொருட்களை வழங்கியதாகவும் சேமிப்புக் கிடங்கை காலி செய்ய வேண்டிய உள்ளதாகவும் காலாவதியாகும் பொருட்களை தந்ததாகவும் கூறி சமாளித்துள்ளனர்.
"கஜா புயலால் வீடுவாசல்களையும், வாழ்வாதாரங்களையும் முழுமையாக இழந்த மக்கள் வீதிக்கு வந்து கையேந்தி நின்று பசிக்காக போராடியதை கண்டும் இந்த அரசு திருந்தாமல் உணவுப் பொருட்களிலும் கையை வைத்து விளையாடி வேதனை அளிக்கிறது." என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.