துறை சார்ந்த தொழில்நுட்பம், உற்பத்தி, தோட்டக்கலை நுட்பங்கள் போன்ற விவசாய செயல்பாடுகளை அறிந்து பயனுற மாவட்ட நிர்வாகம் சார்பில் "விவசாயக் கண்காட்சி" நடைபெறுவது வழமையான ஒன்று. தமிழக அரசு இதற்கென தனியாக நிதி ஒதுக்கியும் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஐந்து வருடங்களாக "விவசாயக்கண்காட்சியை" நடத்தவில்லை மாவட்ட நிர்வாகம். உடனடியாக இதனைக் களைந்து மீண்டும் "விவசாயக்கண்காட்சி"யினை நடத்த வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.
சமூக ஆர்வலரான அக்ரி பரமசிவனோ.," தூத்துக்குடி மாவட்ட மக்களின் தொழிலில் ஏறக்குறைய 70% விவசாயம் சார்ந்ததாகும். மாவட்ட மொத்த பரப்பளவில் 44% நிலப்பரப்பில் விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் பல்வேறு தாலுகாக்களில் 2,08,845 ஹெக்டேர் பரப்பளவில் நெல், பருத்தி, உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம், கம்பு, தென்னை, வாழை, பூ வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் விவசாயம் சார்ந்த இதர தொழில்களும் நடைப்பெற்று வருகின்றன. மாவட்டத்தில் வேளாண் கல்லூரி, வேளாண் அறிவியல் மையம், வேளாண் விரிவாக்க மையம், தோட்டக்கலை மையம், வேளாண் பொறியியல் மையம் என பல மையங்கள் பெயரிலளவில் தான் உள்ளன.
விவசாய பயன்பாட்டில் உள்ள விதைகள், மருந்துகள், இடுபொருட்கள், விவசாய கருவிகள், தோட்டக்கலை தொழிற்நுட்பங்கள், மின் மோட்டார்கள், மண் பரிசோதனை போன்ற செயல்பாடுகளை விவசாயிகள் தெரிந்து கொள்ளவும், பயன்படுத்தி கொள்ளவும் விவசாய முன்னேற்பாடுகளுக்கான வசதிகளை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இதற்கென மற்றைய மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள ஆண்டுதோறும் விவசாய கண்காட்சி என்பதனை இங்கு நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழக அரசு இதற்கென நிதி ஒதுக்கியும் ஐந்தாண்டுகளாக விவசாயக்கண்காட்சியினை நடத்தவில்லை மாவட்ட நிர்வாகம். இதிலுள்ள முறைகேடுகளை களைந்து உடனடியாகவும், இனி வரும் காலங்களில் ஆண்டுதோறும் தவறாமல் விவசாயக்கண்காட்சியினை நடத்த ஆர்வம் காட்டவேண்டும்." என்கிறார் அவர். இதனை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கையாகவும் மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.