மேகதாது அணை கட்ட அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் திமுக தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டன.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதாது. புயல் பாதிப்புக்கு பின்னர் இன்னும் மக்கள் அரசின் நிவாரணம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
இந்த எடப்பாடி சர்கார் புயல் பாதிப்பிலும்கூட கமிஷன் கிடைக்குமா என்றுதான் நினைக்கிறது. கோ-ஆப்டெக்ஸில் லட்சக்கணக்கான போர்வைகள், சமுக்காளங்கள் ஸ்டாக் இருக்கிறது. ஆனால் அங்கே கொள்முதல் செய்யவில்லை. அதற்கு மாறாக தனியாரிடம் கொள்முதல் செய்கிறார்கள். புயல் பாதிப்பில் மக்கள் கண்ணீர் விடும்போது கூட எவ்வளவு கறக்கலாம் என்று நினைக்கிறார்களே தவிர மக்களின் துயரை துடைப்பதற்கு தயாராக இல்லை.
மேகதாது அணை திட்ட அறிக்கை தயார் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. காவிரியில் தண்ணீரை முழுமையாக நிறுத்த கர்நாடக அரசு தொடர்ந்து அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. இன்றைக்கு நடக்கும் ஆர்ப்பாட்டம் மேகதாது பிரச்சனைக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்காகவும்தான்.
அரசியல் மாற்றம் ஏற்படாமல் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது. மத்தியிலும், மாநிலத்திலும் அரசியல் மாற்றத்திற்கான காலம் நெருங்கிவிட்டது. எங்கள் அணியின் முதல் அமைச்சர் வேட்பாளர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான். தமிழக மக்கள் அதனை நோக்கி திரள வேண்டும் என்றார்.