
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாநில அரசும், மத்திய அரசும் செய்து வருகிறது.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் நாளை(22ம் தேதி) ராமர் பெயரில் அன்னதானம், சிறப்பு பூஜை செய்ய தமிழ்நாடு அறநிலையத்துறை அனுமதி மறுப்பு என தகவல்கள் பரவின.

இதற்கு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஜனவரி 22ம் தேதியன்று நடைபெறும் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதித்துள்ளது . தமிழகத்தில் ஸ்ரீராமருக்கு 200க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இந்து சமயம் அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் கோயில்களில் ஸ்ரீ ராமரின் பெயரில் பூஜை/பஜனை/பிரசாதம்/அன்னதானம் அனுமதிக்கப்படுவதில்லை. தனியாருக்கு சொந்தமான கோயில்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் போலீசார் தடுத்து வருகின்றனர். பந்தல்களை கிழித்து விடுவோம் என அமைப்பாளர்களை மிரட்டுகின்றனர். இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன்”என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை சேகர்பாபு, “சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும், திமுக இளைஞரணி மாநாட்டை திசைதிருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ராமர் பெயரில் பூசை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை. முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது” என்று தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.