அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நவம்பர் 10 முதல் 17 வரை உலக கேரம் போட்டி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டின் சார்பில் கே.நாகஜோதி, எம்.காசிமா, வி.மித்ரா என மூன்று கேரம் விளையாட்டு வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ள 3 விளையாட்டு வீராங்கனைகளுக்கும், பயிற்றுநர் மரியா இருதயத்திற்கும் செலவீனத் தொகையாக தலா ரூ.1.50 லட்சத்திற்கான காசோலைகளை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
மேலும் நியூசிலாந்தில் ஜூலை 16 முதல் 19 வரை நடைபெற உள்ள ஜூனியர் காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கவுள்ள ஜாய்ஸ் அஷிதாவுக்கு செலவீனத் தொகையாக ரூ.2.00 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விளையாட்டு வீரர்கள் சாதிக்க, வறுமை தடையாகக் கூடாது என்பதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் நோக்கம். அந்தத் தடையை நீக்க, தொடங்கப்பட்டதே தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை. தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் பிறருக்கு உதவவும், உதவிகளைப் பெறவும் இந்த இணைப்பில் சென்று தகவல்களை அறியலாம்: https://tnchampions.sdat.in/home” எனத் தெரிவித்துள்ளார்.