Skip to main content

மெத்தனப் போக்கை கைவிடுக! - சென்னை மாநகராட்சி முற்றுகை

Published on 11/10/2017 | Edited on 11/10/2017
மெத்தனப் போக்கை கைவிடுக! - சென்னை மாநகராட்சி முற்றுகை

டெங்கு பாதிப்புகளைக் கண்டுகொள்ளாத சென்னை மாநகாட்சியைக் கண்டித்து நூதனமான முறையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு பாதிப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளன. பல இடங்களில் முறையான பராமரிப்பு நடவடிக்கைகள் எடுக்காத சூழல் நிலவிவருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. இந்நிலையில், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் மற்றும் சி.பி.ஐ.-ன் மாதர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சென்னை மாநகராட்சியை இன்று காலை முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்கள் டெங்குவால் உயிரிழந்ததைப் போல் கிடப்பவரை தூக்கிக்கொண்டு நுழைய முற்படுவது, கொசுவலைகளைப் போர்த்திக்கொண்டு முழக்கமிடுவது உள்ளிட்ட நூதன போராட்டங்களில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டெங்கு குறித்து அறிக்கை வெளியிடாமல் மக்களைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். வெளிநாடுகளில் டெங்குவைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் டெங்கு வேக்சியாவை மருத்துவமனைகளில் வழங்கவேண்டும். மருத்துவமனைகளில் மாலைநேர புறநோயாளிகள் பிரிவினைத் தொடங்கவேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் எலிசா பரிசோதனைக்கான கருவிகளை அமைக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி முழக்கமிட்டனர்.

இவ்வாறு முழக்கமிட்டுக் கொண்டே சென்னை மாநகராட்சிக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைதுசெய்து அழைத்துச்சென்றனர். 

- சி.ஜீவாபாரதி

சார்ந்த செய்திகள்