சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர். கே பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு ஸ்மார்ட் மின் மீட்டர் வைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. ஸ்மார்ட் மீட்டர் வைத்தால் தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட், விசைத்தறி தொழிலாளர்களுக்கு 1000 யூனிட் மற்றும் விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் கிடைக்காத வகையில் பெரிய தாக்குதலை ஒன்றிய அரசு செய்துள்ளது.
மின்சார மீட்டரை கொடுத்துவிட்டு அதற்கான பணத்தையும் தவணை முறையில் மக்களிடம் வசூலித்துக் கொள்வார்கள். இதனால் மின்சார வாரியம் என்பதை ஒழித்துவிட்டு தனியார் கையில் ஒப்படைக்க ஒன்றிய அரசு துரித நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. ஒன்றிய அரசு ஸ்மார்ட் மீட்டர் வைக்கவில்லை என்றால், உதய் திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்க முடியாது என மாநில அரசை கட்டாயப்படுத்துகிறது. இதற்கு கேரளா அரசு மாநிலத்திற்கு இழப்பு ஏற்பட்டாலும் ஸ்மார்ட் மீட்டரை வைக்க முடியாது என்று கூறியதுபோல தமிழக அரசும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
இதனையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 25ஆம் தேதி முதல் 15 நாட்கள் மின்சார வாரியத்தில் ஸ்மார்ட் மீட்டரை வைக்க கூடாது என தமிழக முழுவதும் மனு கொடுக்கும் நிகழ்வை நடத்த உள்ளோம். மின் கட்டண உயர்வுக்கு ஒன்றிய அரசு தான் காரணம். ஆனால் மாநில அரசு மின் கட்டணத்தை ஏற்றுவதாக பாஜகவினர் பேசிவருகிறார்கள். குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் இரட்டிப்பு வேலையை பாஜக செய்து வருகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
நாடு முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என அனைத்து கட்சிகளும் கூறி வருகிறது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்றத்திலும் வலியுறுத்தியுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒன்றிய அரசு தான் செய்ய முடியும். மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி வாரியாக பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தையும் இணைத்து கணக்கெடுப்பு டுக்க வேண்டும். கடந்த 2011 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு கணக்கெடுப்பு நடத்தியது, ஆனால் ஜாதி அடிப்படையில் என கணக்கெடுப்பை வெளியிடவில்லை. 2021 இல் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதியவாரிய கணக்கெடுப்பும் நடத்த வேண்டும் கொரோனாவை காரணம் காட்டி அவர்கள் நடத்தவில்லை.
பெரும்பான்மையான நாடுகளில் கொரோனா நேரத்திலும் நடத்தப்பட்டுள்ளது. இது உண்மையான காரணம் இல்லை. சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தினால் பொருளாதாரம், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணியிடங்களில் எவ்வளவு பேர் பணியாற்றுகிறார்கள் என்ற விவரம் வெளிச்சத்திற்கு வந்து விடும். இதனால் அவர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதியவாரிய கணக்கெடுப்பு எடுக்க மறுக்கிறார்கள். எனவே மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி வாரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
பல லட்சம் கோடி மதிப்புள்ள ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் நிலங்களை தனியாருக்கு விற்கும் நடவடிக்கைகளில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. நூறாண்டுகளுக்குப் பிறகு ரயில்வே நிர்வாகத்தை விரிவுபடுத்தும் போது இது போன்ற நிலங்கள் வாங்க முடியுமா? எனவே இதனை தடுத்து நிறுத்த வேண்டும். 100 நாள் வேலை செய்த தொழிலாளர்களுக்கு ஒன்றிய அரசு நாடு முழுவதும் ரூ 12700 கோடி பாக்கி வைத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ2400 கோடி உள்ளது. தற்போது தீபாவளி நேரம் ஒவ்வொரு வீடுகளிலும் ரூ 8000 வரை பாக்கி உள்ளது. 100 நாள் கூலி தொழிலாளர்களுக்கு பாக்கி வைக்கிற அரசாங்கம் என்ன அரசாங்கம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு உடனடியாக 100 நாள் கூலியை ஒன்றிய அரசு விடுவிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தில் அமைச்சர்களின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை ரெய்டு நடக்கிறது. தீவிரமாக இந்த நேரத்தில் ரெய்டு நடத்துவதற்கான காரணம், தேவை என்ன இருக்கு என்பதை கேட்க வேண்டியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டி பணிய வைப்பதற்கான நடவடிக்கையாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இது போன்ற எந்த நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தற்போது தமிழகத்தில் அமைச்சர்கள், தொழிலதிபர்கள், சிறுதொழில் முதலாளிகள் உள்ளிட்டவர்களின் பல்வேறு இடங்களில் ரெய்டு நடத்துவது, தமிழகத்தில் பாஜக தேர்தல் நிதியை திரட்ட செய்வதாக மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
தமிழக முதல்வர் கடந்த 2 ஆம்தேதி தேதி விடுதலைப் போராட்டத்தில் அளப்பரிய அளவிற்கு ஈடுபட்ட தென்னாட்டு ஜான்சி ராணி என அழைக்கப்பட்ட அஞ்சலை அம்மாளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று கடலூரில் அவரது முழு உருவ சிலையை திறந்து வைத்துள்ளார். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்று பாராட்டி நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
நடராஜர் கோவிலில் தொடர்ந்து பல்வேறு மக்களுக்கும் பக்தர்களுக்கும் விரோதமான செயல்கள், விதிமீறல்கள் நடைபெற்று வருவதால், இதனை அரசு தனிச் சட்டம் இயற்றி அரசின் முழு கட்டுப்பாட்டுக்கு எடுக்க வேண்டும். இதில் நீதிமன்ற உத்தரவு உள்ளது என கூறுகிறார்கள். அரசு சட்டம் இயற்றி எடுத்தால் எந்த நீதிமன்றமும் தடுக்க முடியாது. இதே போல் தான் காசி விஸ்வநாதர் ஆலயமும், பிஜேபி ஆளும் சட்டீஸ்கர் மாநிலத்திலும் 12 கோவில்களை தனி சட்டம் இயற்றி அரசு கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல உதாரணங்கள் உள்ளது. நடராஜர் கோவில் என்பது வரலாற்று பொக்கிஷம். இதனை மற்ற தலைமுறையினருக்கும் அடையாளப்படுத்த வேண்டும். இது தேசத்திற்கு சொந்தமானது. ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு சொந்தமானது என அடையாளப்படுத்தக் கூடாது.
அண்ணாமலை பல்கலைக்கழகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் போராட்டத்தால் அரசுடமையாக்கப்பட்டுள்ளது இல்லையென்றால் நிதி சிக்கலில் மாட்டிக்கொண்டு மோசமான நிலையை சந்தித்து இருக்கும். இது தமிழகத்திலேயே 2-வது பல்கலைக்கழகம் 100-ஆண்டு விழாவை நோக்கி செல்லும் இந்த பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
முன்னதாக விடுதலை போராட்ட வீராங்கனை தென்னாட்டு ஜான்சிராணி அஞ்சலை அம்மாளுக்கு சிலை அமைக்க வேண்டும் என முதல் குரல் கொடுத்த மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனை அஞ்சலையம்மாள் குடும்பத்தினர் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். இவருடன் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்ஜி ரமேஷ்பாபு, நகரச்செயலாளர் ராஜா, நகர்மன்ற துணைத்தலைவர் முத்துக்குமரன் உள்ளிட்ட கட்சியினர் உடன் இருந்தனர்.