![Judgment adjourned in the case related to the release of Perarivalan!](http://image.nakkheeran.in/cdn/farfuture/-NZWgMzQPWlao9cZGVW93UHvt0biWXexPpAnZAKQ5Pc/1652266310/sites/default/files/inline-images/tryry7575.jpg)
ராஜீவ்காந்தி கொலை வழக்கின் தண்டனையை நிறுத்தி வைத்து சிறையிலிருந்து தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் முடிவு ஒவ்வொரு முறையும் முரண்பட்டதாக இருப்பதாகவும், இதனால் பலமுறை வழக்கை தேவையின்றி ஒத்திவைக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும் அதிருப்தி தெரிவித்தது. மேலும், பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை மத்திய அரசு ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இன்றைய (11/5/2022) தினத்திற்கு ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அளித்திருந்த கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இந்த மனு மீண்டும் இன்று பிற்பகல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு, “மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரிக்கும் வழக்குகளில் விடுதலை செய்வது மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. பேரறிவாளன் வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பின் கீழ் வருவதால் மாநில அரசு முடிவெடுக்க முடியாது. மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்குள் வரும் விசாரணை அமைப்புகளின் வழக்குகளில் மட்டும் மாநில அரசு முடிவெடுக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு நீதிபதிகள், “இந்திய குற்றவியல் சட்டத்தின் 432 மற்றும் 161 பிரிவுகளுக்கிடையே என்ன வேறுபாடுகள் உள்ளன” என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், “ கடந்த இரண்டு முறை முடிவுகளை தேர்வு செய்யக் கூறினோம், ஏதேனும் முடிவு செய்யப்பட்டதா? ஆளுநர் சார்பில் மத்திய அரசு ஆஜராகுவது ஏன் என்பதற்கு பதில் அளியுங்கள். ஆளுநர் முடிவெடுக்காமல் பல ஆண்டுகள் காலம் தாழ்த்தியது தொடர்பாக என்ன கூற விரும்புகிறீர்கள்? ஆளுநர் முடிவு மாநில அரசின் முடிவுக்குள் வருகிறது. பேரறிவாளவன் விவகாரத்தில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆளுநர் முடிவெடுக்கவில்லை.அமைச்சரவை முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா? நாங்கள் முடிவெடுக்க முடிவு செய்த போது குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளதாக கூறியுள்ளீர்கள். கிரிமினல் வழக்குகளில் மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை எனக் கூறுவது போல் தோன்றுகிறது” என நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பினர்.
தொடர்ந்து காரசாரமாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் இந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.