அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து, சசிகலா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி அ.தி.மு.க.வின் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு வரும் ஏப்ரல் 11- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சசிகலாவின் வழக்கை எதிர்க்கும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஸ்ரீதேவி விடுமுறை எடுத்ததால், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கில் தீர்ப்பு அளிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த 2016- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சசிகலா அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, கடந்த 2017- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பதவி நீக்கம் செய்தது செல்லாது என அறிவிக்கக் கோரியும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கட்சியின் விதிகளுக்கு புறம்பானது எனவும் உத்தரவிடக்கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சசிகலாவின் மனுவை நிராகரிக்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்படவிருந்த நிலையில், நீதிபதி திடீரென விடுப்பு எடுத்ததால், வரும் ஏப்ரல் 11- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.