தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சொல்லாத கருத்துகளை சொல்லியதாக அவதூறு பரப்பியதாக முன்னாள் டிஜிபியும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நட்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக மத்திய மாவட்ட வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த ஷீலா, திருச்சி எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார். இதனையடுத்து முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது திருச்சி சைபர் கிரைம் போலீஸார் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
டி.ஜி.பி. நடராஜ், தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அபோது, நட்ராஜ் தரப்பில், அதே வாட்ஸ் அப் குழுக்களில் தன்னை பற்றியும் அவதூறு பேசுவதாகவும், தகாத வார்த்தைகளால் விமர்சிப்பதாகவும், ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், காவல்துறை விசாரணைக்கு தடை விதித்தார். மேலும், ‘ஒரு புகார் தொடர்பாக விசாரிக்கும்போது மற்றொரு குற்றம் நிகழ்ந்தால், புகார் கொடுக்கும் வரை காவல்துறை நடவடிக்கை எடுக்காதா? நட்ராஜ் தெரிவிக்கும் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அந்த வகையில் நேற்று (19ம் தேதி) இந்த மனு விசாரணைக்கு வந்தது. இதற்கிடையில், நீதிபதிகள் சுழற்சி முறையின் அடிப்படையில் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வந்தது. அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
தற்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கு விசாரணையிலிருந்து விலகியதால் வழக்கு வேறு ஒரு நீதிபதி முன்பு பட்டியலிட்டு விசாரிக்கப்படும்.