பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டு பாலியல் வண்புனர்வை போன்று பெரம்பலூரிலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பெரம்பலூரைச் சேர்ந்தவர் ப.அருள். வழக்கறிஞரான இவர், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.
அருள்
அதில் அவர், பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டு பாலியல் வண்புனர்வை போன்று பெரம்பலூரிலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதில் பெரம்பலூர் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகரும், பத்திரிகையாளர் என்று சொல்லிக்கொண்டு வலம் வரும் ஒரு போலி நிருபரும் மற்றும் இன்னும் சிலரும் குழுவாக ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இதில் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி காம இச்சைக்கு இணங்க வைத்து அதனை வீடியோ எடுத்துவைத்துக்கொண்டு அவர்களை மிரட்டி பணம் பறிப்பது மற்றும் பாலியல் தொல்லை கொடுத்து வருவது, மறுக்கும் பெண்களை வீடியோக்களை வெளியே விடுவோம் என்று மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இவர்களுடைய மிரட்டலுக்கு பயந்து 20க்கும் மேற்பட்ட பெண்கள் இருந்து வருகின்றனர். மேற்படி சம்பவங்கள் பெரம்பலூரில் உள்ள நட்சத்திர விடுதி உள்பட பல இடங்களில் நடைபெற்று வருவதாக தெரிகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமலும், மேற்கண்ட பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் மற்றும் கொலை மிரட்டலில் ஈடுபட்ட மேற்கண்ட நபர்கள் மீது உரிய விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட பெண்களின் எதிர்கால நலன் மற்றும் பாதுகாப்பை கருதி காவல்துறை கண்காணிப்பாளர் தாமாக முன்வந்து இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
வழக்கறிஞர் அருள் பெரம்பலூர் எஸ்.பி திஷா மித்தலிடம் கொடுத்த புகார் மனு ஏற்கப்பட்டு மாவட்ட எஸ்.பி-யின் பரிந்துரையின் அடிப்படையில் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செயப்பட்டுள்ளது.