சேலம் டூ சென்னை இடையிலனா 274 கி.மீ தூரத்துக்கான 8 வழிச்சாலைக்காக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் நிலங்களை கையகப்படுத்தி முடித்த வருவாய்த்துறை அடுத்ததாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 9ந் தேதி முதல் உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் தாலுக்காக்களில் பயண வழியில் அளவீடு பணியில் ஈடுப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கு எதிர்ப்புகளே இல்லையென முதல்வர் முதல் மாவட்ட ஆட்சியர்கள் வரை தெரிவித்தனர். அளவீடு நடக்கும்போது கொதித்துப்போய் பல இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தியும், அதிகாரிகளை விரட்டியடித்தனர். அதையும் மீறி 4 மாவட்டங்களில் அளவீடு பணியை முடித்தனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த திட்டத்தில் தங்களது நிலத்தை எடுக்ககூடாது என நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் கலெக்டரிடம் கடந்த 9ந்தேதி மனுநீதி நாள் முகாமில் மனு அளித்தனர். இதனை தொடர்ந்து திட்டத்தை எதிர்க்கும் இயக்கங்கள், இந்த திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கும் கால அவகாசம் குறைவாக உள்ளது, அதனால் அதனை நீட்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ஆட்சியர் கந்தசாமிக்கு தெரிவித்தனர்.
அந்த கோரிக்கையை அடுத்து மனு அளிக்கும் காலத்தை 15 நாள் அதிகப்படுத்தியுள்ளார் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி. அதன்படி வரும் 25ந்தேதி வரை திருவண்ணாமலையில் இந்த திட்டத்துக்காக அமைக்கப்பட்ட தனி அலுவலகத்தில் மனுக்கள் அளிக்கலாம் என அறிவித்துள்ளார்.