தனியார் பேருந்து பயணத்தின் பொழுது உணவு அருந்துவதற்கு பேருந்து உணவகத்தில் நிறுத்தப்பட்ட பொழுது பயணி ஒருவரின் 4 சவரன் தங்க நகை, 8 கிராம் வைர நகை பேருந்தில் இருந்து திருடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூர் கோரமங்கலா பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி என்பவர் அவரது குடும்பத்தாருடன் கோயம்புத்தூரில் உள்ள உறவினர் ஒருவரின் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். ஆர்த்தியுடன் அவரது தந்தை ஆல்சார், தாய் உமாராணியும் சென்றுள்ளார். அப்பொழுது அந்த தனியார் பேருந்து கிருஷ்ணகிரி-கோவை நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் உணவு அருந்துவதற்காக நின்றுள்ளது. அதனையடுத்து ஆர்த்தி அவரது தந்தை தாயுடன் அங்கு உணவு சாப்பிட இறங்கியுள்ளார்.
அப்பொழுது உடன் கொண்டுவந்த 8 சவரன் தங்க நகை மற்றும் 8 கிராம் வைர நகைகளை பேருந்தில் பேக்கிலேயே விட்டுவிட்டு மூவரும் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில் சாப்பிட்ட பின் பேருந்துக்கு வந்த அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் கொண்டுவந்த பேக் திறக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ந்த ஆர்த்தி, உள்ளே சோதித்து பார்த்ததில் நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. மேலும் அவர்கள் கொண்டுவந்த சில்வர் குடமும் மர்ம நபர் ஒருவரால் திருடப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக கிருஷ்ணகிரி போலீசாரிடம் ஆர்த்தி புகாரளித்த நிலையில் அந்த பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர், உணவகத்தின் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.