தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி அண்மையில் விவாகரத்து முடிவை அறிவித்திருந்தது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஜெயம் ரவி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதேநேரம் ஆர்த்தி, ஜெயம் ரவியின் விவாகரத்து தன்னிச்சையாக எடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும், ஜெயம் ரவியின் இந்த முடிவு, முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று எனக் கூறி பரபரப்பைக் கிளப்பியிருந்தார். மேலும் ஜெயம் ரவியை சந்திக்க பலமுறை முயற்சித்தும் பார்க்க அனுமதிக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் கோலிவுட்டில் பரபரப்பை கிளப்ப, ஜெயம் ரவி விவகாரத்து முடிவு எடுப்பதற்கு பெங்களூரை சேர்ந்த கெனிஷா என்ற பாடகிதான் காரணம் என பேசப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயம் ரவி, “வாழு வாழ விடு. என்னுடைய தனிப்பட்ட விஷயத்தில் யாரையும் இழுக்காதீங்க. தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்டதாகவே இருக்க விடுங்க. கெனிஷா 600 மேடைகளில் பாடியவர். பல உயிரை காப்பாற்றிய ஒரு ஹீலர். நானும் கெனிஷாவும் எதிர்காலத்தில் ஒரு ஹீலிங் சென்டர் ஆரம்பிக்க இருக்கிறோம். அதன் மூலம் பல பேருக்கு உதவ வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். அதை கெடுக்காதீங்க. அதை யாராலும் கெடுக்கவும் முடியாது” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த விவாகரத்து விவகார சர்ச்சைக்கு இடையே நடிகை ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். சில தினங்களுக்கு முன்பு அவர் கொடுத்த புகாரில் சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள ஆர்த்தியுனுடைய வீட்டில் உள்ள தன்னுடைய உடைமைகளை மீட்டுத்தர கோரி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது ஜெயம் ரவியின் புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.