![j](http://image.nakkheeran.in/cdn/farfuture/gC5_sQRxnqkUUix_Nx2GqcyLi5aKHOzUIEbod5Gt-MU/1646724491/sites/default/files/inline-images/916235-907505-jayalalithaa.jpg)
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (07/03/2022) மீண்டும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையைத் தொடங்கியது. சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அப்பல்லோ மருத்துவர்கள் நேற்று குறுக்கு விசாரணைக்கு ஆஜராகினர். அப்பல்லோ மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார்.
விசாரணையில் மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்ததாக அப்பல்லோ மருத்துவர் பாபு மனோகர் தெரிவித்திருந்தார். 2016 ஆம் ஆண்டு பதவியேற்பதற்கு முன்பே அவருக்கு தலைச்சுற்றல், மயக்கம் இருந்ததாகவும், சில மருந்துகளை பரிந்துரைத்ததோடு, உடற்பயிற்சிக்கும் பரிந்துரைத்ததாக மருத்துவர் பாபு மனோகர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்றது. இன்று அப்பல்லோ மருத்துவர்கள் மதன்குமார், ரவிச்சந்திரன், மீனாட்சிசுந்தரம் ஆகியோர் ஆஜராகினர். மதன்குமாரிடம் நடைபெற்ற விசாரணையில் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார். அதில், ஜெயலலிதாவுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி மாலை ஏற்பட்டது மாரடைப்புதான். மாரடைப்பு ஏற்பட்டதும் ஜெயலலிதாவை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டோம் என மதன்குமார் தெரிவித்துள்ளார்.