கடந்த சில நாட்களாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில் ஊடுருவிய தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார். இதனால் ராணுவ வீரரின் சொந்த மாவட்டமே சோகத்தில் மூழ்கியது.
எல்லையிலுள்ள ஜம்மு- காஷ்மீரத்தின் சில பகுதிகள் தங்களுக்குத் தான் சொந்தமென பாகிஸ்தான் தீவிரவாதிகளின் துணை கொண்டு ஆக்கிரமிக்க வந்தாலும், அவ்வப்போது தக்க பதிலடி கொடுத்து திருப்பி அனுப்பி வருவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது இந்திய ராணுவம். இந்நிலையில், ஜம்மு- காஷ்மீரத்திலுள்ள ஹிந்த்வாராப் பகுதியில் தீவிரவாதிகளின் ஆக்கிரமிப்பு ஊடுருவல் அதிகளவில் காணப்பட, தீவிர ரோந்துப் பணியினை முடுக்கிவிட்டது இந்திய ராணுவம். இதில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இந்திய ராணுவ பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஐந்து வீரர்கள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதனால் ஜம்மு- காஷ்மீரத்தின் குப்வாராவில் மீண்டும் ரோந்துப் பணி தீவிரமடைந்து தீவிரவாதிகளுடன் சண்டையிட்டது பாதுகாப்புப் படை. இந்தத் துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படையினை சேர்ந்த மூன்று ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அதில் தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தினை சேர்ந்த 32 வயதான சந்திரசேகரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிஆர்பிஎப்-பின் 92- வது பட்டாலியனியில் பணியாற்றிய சந்திரசேகர் கடந்த 27.10.2014 இல் பணிக்குச் சேர்ந்துள்ளார். இவரது சொந்த ஊர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகிலுள்ள மூன்றுவாய்க்கால் கிராமம். இவரது தந்தையான செல்லச்சாமி அச்சன்புதூர் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்தவர். பணியில் இருக்கும் போதே உயிரை விட்ட ராணுவ வீரர் சந்திரசேகர் போல, அவரது தந்தையான எஸ்.எஸ்.ஐ- செல்லச்சாமியும் பணியிலிருக்கும் போதே உயிரிழந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. துப்பாக்கிச் சண்டையில் வீரமரணம் அடைந்த சந்திரசேகருக்கு ஜெனி என்கின்ற மனைவியும், ஒன்றரை வயது குழந்தையும் உள்ளது. கணவன் ராணுவத்தில் பணியாற்றுவதால் திருச்சியில் உள்ள தனது தாய் வீட்டில் உள்ளார்கள் ஜெனியும் அவரது குழந்தையும்! இளம் வயதில் வீர மரணமடைந்த சந்திரசேகரை எண்ணி தென்காசி மாவட்டமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.