தமிழகத்தில் 2021- ஆம் ஆண்டு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தமிழகத்தில் 2021-ல் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் 300 வீரர்களுக்கு மிகாமல் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 300 மாடுபிடி வீரர்கள், 50% பார்வையாளர்களுடன் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளை நடத்தலாம். எருதுவிடும் நிகழ்ச்சியில் 150 வீரர்கள் வரை மட்டுமே பங்கேற்க வேண்டும். மாடுபிடி வீரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மையத்தில் 'கரோனா இல்லை' எனச் சான்று பெற்றிருக்க வேண்டும். பார்வையாளர்களாகப் பங்கேற்பவர்கள் முகக்கவசம், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக ஜல்லிக்கட்டு நடக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில், தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.