புத்தாண்டு மற்றும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் முழுவதும் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக அளவில் புகழ் பெற்றவை என்றாலும், ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் தொடங்கும். அங்குள்ள தச்சங்குறிச்சி விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று தொடங்கியது. 746 காளைகள், 297 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் இந்த ஜல்லிக்கட்டு போட்டி 10 சுற்றுகளாக நடைபெறவுள்ளது. போட்டியில் முதலிடம் பிடிக்கும் வீரர் மற்றும் காளையின் உரிமையாளருக்கு பல்சர் பைக் பரிசாக வழங்கப்பட உள்ளது. இந்த போட்டியினை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் இருவரும் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.