ஆன்லைன் சூதாட்டம் மற்றும் இணைய வழி வாய்ப்பு விளையாட்டு பற்றி விளம்பரப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தமிழகத்தில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்த நிலையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வருகிறது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிப்பது மற்றும் ப்ரொமோட் செய்வதைப் போன்று விளம்பர பதாகைகள், படங்கள், சுவரொட்டிகள், பேனர்கள் வைக்கக்கூடாது எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதோடு, ஆன்லைன் சூதாட்ட இணையதளம் அல்லது செயலி பயன்பாடுகளை விளம்பரப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டம் அல்லது பந்தைய நடவடிக்கைகள் பற்றி tnoga@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக விளம்பரம் செய்தால் 1 ஆண்டு சிறை அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதே குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்தால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ஐந்து முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனத் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.