கோவையில் ஈஷா யோகா மைய அறக்கட்டளையை நிறுவி இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சீடர்களைக் கொண்டுள்ளவர் ஜக்கி வாசுதேவ். ஈஷாவை தொடங்கிய நாள் தொட்டு இன்றுவரை பல்வேறு சர்ச்சைகளில் ஜக்கி வாசுதேவும் அவரது ஈஷா மையமும் சிக்கி வருகிறது. காடுகளை அழித்து ஈஷா மையம் கட்டப்பட்டதாகவும், இளம் பெண்களை மூளைச் சலவை செய்து ஊதியமே இல்லாமல் பணியில் சேர்த்திருப்பதாகவும், ஈஷா மையத்திற்கு யோகா பயிற்சிக்காக வந்த குடும்பப் பெண் சுபஸ்ரீ என்பவர் மர்மமான முறையில் இறந்ததாகவும் சர்ச்சைகளின் எண்ணிக்கை நீண்டுகொண்டே போகிறது. அதேபோல, ஈஷா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி, பிரதமர், தொழில் துறை, விளையாட்டுத் துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்வது வழக்கம். இந்த அளவுக்கு அதிகார வர்க்கங்களுடன் நெருங்கிய உறவை வளர்த்து வருகிறார் ஜக்கி.
இந்நிலையில் பத்திரிகையாளர் ஆனந்த் நரசிம்மன் ட்விட்டரில் ஜக்கியின் உடல்நிலை குறித்த தகவலைப் பகிர்ந்துள்ளார். ஈஷா ஜக்கி வாசுதேவ், கடந்த சில நாட்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். தலைவலி காரணமாக ஜக்கியின் டாக்டர் வினித் சூரியிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார். அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க ஆலோசனை வழங்கப்பட்டது. அதில் ஜக்கியின் மூளையில் இரத்தப்போக்கு இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், ஜக்கி வாசுதேவ் சமீபத்தில் உயிருக்கு ஆபத்தான மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஈஷா மையத்தின் சார்பில் கூறுகையில், சாமியார் வாசுதேவ் கடந்த நான்கு வாரங்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். வலி தீவிரமாக இருந்தபோதிலும், அவர் தனது வழக்கமான பணிகளை மேற்கொண்டார். மேலும், கடந்த மார்ச் 8 அன்று இரவு முழுவதும் மகா சிவராத்திரி கொண்டாட்டங்களில் ஈடுபட்டார். மார்ச் 14 ஆம் தேதி மதியம் அவர் டெல்லிக்கு வந்தபோது, தலைவலி மிகவும் கடுமையாகியுள்ளது. இந்திர பிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் நரம்பியல் நிபுணரான டாக்டர் வினித் சூரியின் ஆலோசனையின் பேரில், ஜக்கி வாசுதேவுக்கு அதே நாளில் மாலை 4:30 மணிக்கு அவசர MRI பரிசோதனை செய்யப்பட்டது. இதன்மூலம், சாமியார் மூளையில் பெரிய ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. கடந்த 3-4 வாரங்களில் நீடித்த இரத்தக்கசிவு இருந்ததும் பரிசோதனையில் தெரியவந்தது.
இதையடுத்து, அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டது. மார்ச் 17 அன்று, ஜக்கி வாசுதேவின் நரம்பியல் நிலையும், இடது காலின் பலவீனமும் சேர்ந்து உடலை மோசமாக பாதித்தது. மீண்டும் மீண்டும் வாந்தியுடன் தலைவலி ஏற்பட, உடல்நிலை மோசமடைந்தது. இறுதியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் குழுவால் கண்காணிக்கப்பட்ட அவர், மூளையில் ஏற்பட்ட இரத்தப்போக்கை போக்க, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில், அவசர மூளை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஜக்கி வென்டிலேட்டரில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து, சாமியார் ஜக்கியின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது. மற்றும் அவரது மூளை மற்றும் உடல் இயல்பான நிலைக்கு திரும்பியுள்ளன என ஈஷா அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஜக்கி சிவராத்திரி விழா அன்று நடனமாடியதால் வயது மூப்பின் காரணமாக வந்த விளைவுதான் இது என்கின்றனர் அவரது சீடர்கள் சிலர்.
இதற்கிடையில், மருத்துவமனை சிகிச்சையில் இருந்தபடி ஜக்கி வாசுதேவ் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் பேசுகையில், மருத்துவர்கள் என்னுடைய தலைப் பகுதியை ஆபரேஷன் செய்தார்கள். ஆனாலும், அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் மீண்டும் தையல் போட்டுவிட்டனர் என்றார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாக தொடங்கியுள்ளது. இதனால், நடிகர் எஸ்.வி. சேகர் உட்பட பிரபலங்களும், ஈஷா பக்தர்களும் ஜக்கி வாசுதேவ் விரைவில் குணமடைய தங்களது பிரார்த்தனைகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மூளையில் ஏற்பட்ட திடீர் ரத்தக்கசிவு காரணமாக ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் அவரது ஆதரவாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.