புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ஜெகபர் அலி, திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிம வளம் கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்குப் பல முறை மனு கொடுத்து வந்துள்ளார். இதனால், அவர் பல்வேறு அச்சுறுத்தலுக்கு ஆளாகி வந்தார் என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் கடந்த 17ஆம் தேதி (17.01.2025) ஜெகபர் அலி தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று ஜகபர் அலி மீது மோதி விபத்தானது. இந்த விபத்தில், ஜெகபர் அலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜெகபர் அலியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக் கூறி, அவரின் உறவினர்கள் திருமயம் அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் உரிய விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும் எனத் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து ஆர்.ஆர். நிறுவனங்களின் உரிமையாளர்களான ராசு, அவரது மகன் தினேஷ் குமார், ராமையா, ராசுவின் டிப்பர் லாரி வைத்துள்ள நண்பர் முருகானந்தம் மற்றும் அவரது ஓட்டுநர் காசி ஆகிய 5 பேர் மீதும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதற்கிடையே ஜெகபர் அலி கொலை வழக்கில் மெத்தனமாகச் செயல்பட்டதாக திருமயம் காவல் நிலைய ஆய்வாளர் குணசேகர் மீது புகார் எழுந்தாக கூறப்பட்டது. இந்நிலையில் ஆய்வாளர் குணசேகரனை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண் குமார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், ''எல்லாரும் சட்டம் ஒழுங்கு நல்லா இருக்கிறது; நல்லாட்சி நடக்கிறது என்று சொல்கிறீர்கள். ஆனால் வளக்கொள்ளையை தடுக்க ஒற்றை மகன் ஜெகபர் அலி போராடி இருக்கிறார். முதலில் எஸ்.பியிடம் பலமுறை புகார் அளித்திருக்கிறார். எடுத்த நடவடிக்கை என்ன? ஒன்றும் கிடையாது. அவரை வாகனத்தில் ஏற்றிக் கொன்று விட்டு இறந்து விட்டாரா இல்லையா என்பதை உறுதி செய்வதற்கு மறுமுறை ஏற்றி கொலை செய்திருக்கிறார்கள் என்றால் கொலை செய்தவனின் மனநிலை என்ன? எவ்வளவு கொடூர மனநிலை? ஒரு கொள்ளையனுக்கு ஒரு கொலைகாரனுக்கு இவ்வளவு துணிவு எப்படி வந்தது? இந்த சட்டம் அவர்களை பாதுகாக்கிறது. இந்த சட்டம் கொடுக்கின்ற திமிர்.கேட்டால் நல்லாட்சி கொடுக்கிறேன் என்கிறீர்கள்.
ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து வேறொரு இடத்தில் பதவி உயர்வு கொடுப்பீர்கள். திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடையேயுள்ள வேறுபாடு அவர்கள் கொடியில் அண்ணா இல்லை அதிமுக கொடியில் அண்ணா இருக்கிறார். ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடைபெற்றது. அப்பொழுது ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி என்ன? இரண்டே மாதத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்து இதற்கான நீதியை நிலைநாட்டுவோம் என சொல்லி இருக்கிறார். கொடநாட்டில் கொலை யார் ஆட்சியில் நடந்தது, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்தது. அங்கு கொலை நடந்த நோக்கம் என்ன என தெரியவில்லை. ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது இரண்டே மாதத்தில் விசாரித்து கண்டுபிடித்து நீதியை நிலைநாட்டுவேன் என்று சொன்னார். எங்கே நீதி? பொள்ளாச்சியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்தது. நாங்கள் வந்தால் நீதியை நிலைநாட்டுவோம் என்றார்கள். வந்து நான்கு வருடமாகிறது ஏன் நிலைநாட்டவில்லை. கொலையில், கொள்ளையில், திருட்டில், இருட்டில், உருட்டில் அதிமுகவும் திமுகவும் கூட்டு. பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பை ஏற்பதாக இருந்தால் அதிமுக ஏன் பார்ப்பன பெண்ணை தலைமை ஏற்றார்கள். அந்த அம்மாவின் அமைச்சரவையில் ஏன் இருந்தீர்கள்? பதில் இருக்கிறதா?'' என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.