கடந்த 22ந்தேதி முதல் ஜாக்டோ - ஜியோ அமைப்பின் சார்பில் மாநிலம் முழுவதும் பள்ளி ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த போராட்டத்தின் விளைவாக கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு ஆசிரியர்கள் செல்லவில்லை. போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு ஆசிரியர்கள் செல்லவில்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசு எச்சரித்துள்ளது.
அதோடு, 28ந்தேதி பள்ளிக்கு வரவில்லையென்றால் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் எனச்சொல்லி அரசாணை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை, தற்காலிக ஆசிரியர்களையும் தேர்வு செய்து வைத்துள்ளது. அதோடு பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரித்துள்ளது. அதையும் மீறி ஜனவரி 28ந்தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்த முடிவு செய்த ஆசிரியர்கள் பெரும்பாலானவர்கள் பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்துள்ளனர்.
இதில், வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும் ஒன்று. கடந்த ஒருவார காலமாக ஆசிரியர்கள் வகுப்பிற்கு வராததால் யாரும் பாடம் நடத்தவில்லை, இதனால் படிக்க முடியவில்லை எனச்சொல்லி தொடக்க பள்ளி மாணவ மாணவியர்கள் பள்ளி முன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த போராட்டத்துக்கு பின்னால் ஆளும்கட்சியான அதிமுகவின் பிரமுகர்கள் உள்ளார்கள் என்கிற குற்றச்சாட்டை சுமத்துகின்றனர் போராட்டக்களத்தில் உள்ள ஆசிரியர் பெருமக்கள்.