சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு பாராளுமன்ற ஜனநாயகத்திற்கும் நாட்டிற்கும் பேரிழப்பாகும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளயிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,
தலைசிறந்த பாராளுமன்ற ஜனநாயகவாதியும், அனைத்துக் கட்சியினராலும் மதிக்கப்பட்ட முன்னாள் மக்களவைத் தலைவரும், நடுநிலை தவறாத நாயகரும், மக்களவைத் தலைவர்களில் தனிச் சிறப்புமிக்கவரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சோம்நாத் சாட்டர்ஜி மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் நெருங்கிய நண்பராக இருந்த சோம்நாத் சாட்டர்ஜி பாராளுமன்ற ஜனநாயகத்தின் மாண்புகளை கட்டி காக்கும் தலைவராகவும், மக்களவையை கட்சி மன மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலை தவறாது நடத்தியவர்.
தமிழ்நாடு சட்டமன்ற பொன் விழாவில் கலைஞர் அழைப்பினை ஏற்று பங்கேற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர். ஆரோக்கியமான அரசியல் கருத்துகளுக்கும், ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கும் பாராளுமன்றத்தில் இடம் கொடுத்து ஜனநாயக மரபுகளை பாதுகாத்த மிகச்சிறந்த தலைவரின் மறைவு பாராளுமன்ற ஜனநாயகத்திற்கும் நாட்டிற்கும் பேரிழப்பாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.