ஒட்டன்சத்திரத்தில் ஒரு கோடி செலவில் சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என அரசாணை வெளியிட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி 2006 2011 திமுக கழக ஆட்சியில் 2007 ஆம் ஆண்டு மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும் 2010ஆம் ஆண்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் கொண்டுவரப்பட்டு ஒட்டன்சத்திரத்தில் செயல்பட்டு வருகிறது.
ஒட்டன்சத்திரம் வட்டார எல்லைக்கு உட்பட்ட சார்பு நீதிமன்றம் பழனி நகரில் செயல்பட்டு வருகிறது. பழனி நகரானது ஒட்டன்சத்திரத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது. ஒட்டன்சத்திரம் முதல் பழனி வரை செல்லும் பயண நேரம் சுமார் ஒரு மணி நேரம் ஆகும். இதனால் பொதுமக்களும் வக்கீல்களும் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். காவல்துறையினரும் கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதிலும் சிரமப்பட்டு வந்தனர். மேலும் ஒட்டன்சத்திரம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திலும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலும் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தால் வழங்கப்படும் உத்தரவுகளுக்கும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தால் வழங்கப்படும் உத்தரவுகளுக்கும் மேல்முறையீடு செய்யவும் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் குடும்ப நல வழக்குகள் போன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு பரிகாரம் தேடுவதற்கு பழனி சார்பு நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. அவ்வாறு ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனி சென்று வருவதால் காலதாமதம் ஏற்படுவதுடன் தீர்ப்பு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. ஒட்டன்சத்திரம் வக்கீல் சங்கம் சார்பாகவும், பொதுமக்களும் நகரில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கையை ஏற்று சட்டமன்ற கூட்டத் தொடர்களில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தார் இத்தொகுதி எம்எல்ஏவான சக்கரபாணி. அதன்பேரில் சார்பு நீதிமன்றம் அமைக்க சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. தற்போது அதன் அடிப்படையில் ஒரு கோடி செலவில் சார்பு நீதிமன்றம் அமைக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் வக்கீல்கள் சங்கம் சார்பாகவும் பொதுமக்களும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க வேண்டுமென எம்எல்ஏ சக்கரபாணியிடம் கோரிக்கை வைத்தனர். இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்மூலம் அதைக்கண்டு தொகுதி மக்களும் வியாபாரிகளும் மக்களும் மாற்றுக் கட்சியினரும் கூட தொகுதி எம்எல்ஏவான சக்கரபாணியை பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.