Skip to main content

“நாய்க்கடிக்கு மருந்து இங்கே இல்லை..” -நோயாளிகளைத் துரத்தும் சிவகாசி அரசு மருத்துவமனை!

Published on 11/03/2018 | Edited on 11/03/2018
sivakasi

 

தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றால்,  மருத்துவ செலவு எகிறிவிடும் என்பதை அனுபவரீதியாக அறிந்திருக்கும்   ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர். 


சிவகாசியை அடுத்துள்ள சேர்வைக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள், வெறிநாயிடம் கடிபட்ட தங்களின் இரண்டு குழந்தைகளையும், நம்பிக்கையுடன் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கிருந்த அரசு மருத்துவர் “நாய்க்கடிக்கு இங்கே மருந்து இல்லை.. வெளியே தனியார் மெடிக்கல் ஷாப்ல மருந்து வாங்கிட்டு வாங்க.. அப்பத்தான் சிகிச்சை அளிக்க முடியும்.” என்று சொல்ல.. பட்டாசு ஆலையில் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளிகளான அந்தப் பெற்றோர், செய்வதறியாது தவித்திருக்கின்றனர். பலரிடமும் அழுது கெஞ்சி,  கடன் வாங்கி, தனியார் மருந்தகமான லட்சுமி மெடிக்கல்ஸுக்குச் சென்று, ரூ.10,500 விலையுள்ள நாய்க்கடிக்கான மருந்தை வாங்கியிருக்கின்றனர்.  அந்த மருந்தைக் கொடுத்த பிறகே, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிந்திருக்கிறது. 


‘சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான மருந்து இல்லை; பணி நேரத்தில் மருத்துவர்கள் இல்லை” என்பது போன்ற புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு தீர்வு காண வேண்டும் என்பதே சிவகாசி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.  

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்காளர் அட்டை இங்கே! என் ஓட்டு எங்கே? - வாக்காளர் ஆத்திரம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
 Sivakasi, voter panic due to inability to vote
சாந்தி - சங்கரன்

தமிழ்நாட்டில் உள்ள 6 கோடியே 23 லட்சம் வாக்காளர்களில், ஒரு கோடியே 74லட்சத்து 44 ஆயிரம் பேர் வாக்களிக்கவில்லை. மொத்தத்தில், அதி முக்கிய ஜனநாயகக் கடமையை நிறைவேற்றாத வாக்காளர்கள் 28 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் யார் யாருக்கு என்னென்ன  கஷ்டமான சூழ்நிலையோ தெரியவில்லை. ஆனாலும், வாக்களிக்கும் முக்கியத்துவத்தை உணராமல், சோம்பேறித்தனமாக வீட்டிலோ, அலட்சியமாக வெளியூர்களிலோ இருந்தவர்கள், அனேகம் பேர்.

சிவகாசியில் வாக்குச்சாவடி ஒன்றிலிருந்து நம்மை அழைத்த சங்கரன், தன்னையும் தன் மனைவி சாந்தியையும் வாக்களிக்க அனுமதிக்காததால், கொதித்துபோய்ப் பேசினார்.  “இத்தனை வருடங்களாக ஓட்டு போட்டுட்டு இருக்கேன். வாக்காளர் அடையாள அட்டை எங்ககிட்ட இருந்தும், இந்தத்தேர்தல்ல உங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொன்னா, இது அக்கிரமம் இல்லியா? இதெல்லாம் எப்படி நடக்குது? ரொம்பக் கொடுமையா இருக்கு. எங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொல்லி, அங்கேயிருந்த சிவகாசி மாநகராட்சி அலுவலர்களைப் பார்க்கச் சொன்னாங்க.

 Sivakasi, voter panic due to inability to vote

மூணு மாசத்துக்கு முன்னால லிஸ்ட்லசெக் பண்ணும்போது எங்க பேரு இருந்துச்சுன்னு நான் சொன்னேன். லிஸ்ட்ல உங்க பேரு இல்ல. போன் நம்பர் தப்பா இருக்குன்னாங்க. அப்புறம் இன்டர்நெட்ல EPIC நம்பரை போட்டுப் பார்த்து, எலக்‌ஷன் கமிஷன்ல என் பேரு இருக்கிறத காமிச்சதும், அப்படியான்னு சொல்லி, ஓட்டு போடவிட்டாங்க. ஆனா..என் வீட்டுக்காரம்மா சாந்திக்கு ஓட்டு இல்லைன்னு சாதிச்சிட்டாங்க. அவங்க ரொம்பவும் மனசு வேதனைப்பட்டு, நூறு சதவீதம் வாக்களிப்போம்னு போர்டு வைக்கிறாங்க. ஆனா.. ஓட்டு போட வந்தவங்களுக்கு ஓட்டு இல்லைங்கிறாங்க. அப்படின்னா.. நான் வச்சிருக்கிற வாக்காளர் அடையாள அட்டைக்கு என்ன மதிப்புன்னு மொதல்ல சத்தம் போட்டாங்க. அப்புறம் அழுதுட்டாங்க.” என்றார் ஆதங்கத்துடன்.

 Sivakasi, voter panic due to inability to vote

இதே சிவகாசியில், சிவகாசி மாநகராட்சியின் முதலாவது வார்டு திமுக கவுன்சிலர் செல்வத்தின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. சென்னை சாலிகிராமத்தில் வாக்களிக்கச் சென்ற நடிகர் சூரியின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. அவராலும் வாக்களிக்க முடியாமல் போனது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் வாக்களிக்க வராத கோடிக்கணக்கானோர் இருக்கிறார்கள். வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுப்போன சாந்தி, நடிகர்சூரி போன்றோரும் நிறையப்பேர் இருக்கிறார்கள். வாக்களிப்பதில் உள்ள குறைபாடுகளுக்குத் தீர்வுகாண முடியாத நிலையில் உள்ளது டிஜிட்டல் இந்தியா என்று கடுமையாக சாடுகின்றனர் சமூக ஆர்வலர்கள். 

Next Story

தெரு நாய்களைப் பிடித்து காப்பகத்தில் ஒப்படைத்த நகராட்சி!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
municipality caught stray dogs and handed them over to the shelter

புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் தெரு நாய்களால் அடிக்கடி விபத்துகள், நாய்கள் கடித்தல், ஆடு, மாடு கால்நடைகளை கடித்து குதறிவிடுகிறது. அதனால் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பலரும் மனுக்கள் கொடுத்திருந்தனர்.

இந்த மனுக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்திற்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவையடுத்து நகராட்சி ஊழியர்கள் 42 நாய்களை பிடித்திருந்தனர். இந்த நாய்களை வெளியிடங்களிலோ, காட்டுப் பகுதியிலோ இறக்கிவிடப்படும் போது மீண்டும் வந்துவிடும் என்பதால்  விராலிமலை ரோடு இலுப்பூர் தாலுகாவில் உள்ள பைரவர் நாய்கள் காப்பகத்தில் ஒப்படைத்து பராமரிக்க கேட்டுள்ளனர்.

இதே போல கிராமங்களிலும் ஏராளமாக சுற்றித்திரியும் நாய்களையும் பிடித்து காப்பகங்களில் வளர்க்கப்படுமானால், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும் நாய்கள் கொல்லப்படாமலும் பாதுகாக்கப்படலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.