கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பின் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி கடந்த 10 நாட்களுக்கு பிறகு இன்று அதிமுக தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது.
மயிலாப்பூர் வட்டாட்சியர் ஜெகஜீவன்ராம் சீலை அகற்றி சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த அலுவலக மேலாளர்கள் மகாலிங்கம், மனோகர் ஆகியோரிடம் ஒப்படைத்தார். இதனால் அதிமுக தலைமை அலுவலகத்திற்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வின் பொழுது முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உடன் இருந்தார்.
இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மூன்றாவது மாடியில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்ட பரிசு பொருட்கள் காணாமல் போனதாக இபிஎஸ் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா அதிமுகவின் கொள்கைப்பரப்பு செயலாளராக இருந்தபொழுது வழங்கப்பட்ட செங்கோல் அதேபோல் அவருக்கு கொடுக்கப்பட்ட பரிசுப்பொருட்கள், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களைக் காணவில்லை என அலுவலக மேலாளர்கள் மகாலிங்கம் புகார் தெரிவித்துள்ளார்.