திருச்சி மாவட்டத்தில், டெல்லி சென்று திரும்பியவர்கள் கிட்டதட்ட 120 பேருக்குமேலானோர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, மேலும் அவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 43 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்கள் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மற்ற 68 பேரை திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் இவர்களுக்கு இரண்டு முறை இரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்ததில், 61 பேருக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சான்று அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், திருச்சி அரசு மருத்துமனையில் கரோனா சிகிச்சை பெற்றுவந்த 43 பேரில், 32 பேருக்கு கரோனா நோய் தொற்று முற்றிலுமாக குணமானதால், இன்று (16/04/2020) அவர்கள் அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
மகிழ்ச்சியோடு, வழியனுப்பு விழாவில் கலந்துகொண்ட திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு பேசும்போது, திருச்சி மருத்துவர்களின் அசாத்தியமான சேவை பாராட்டுக்குரியது என்றார். கரோனா தொற்று நோயிலிருந்து முழுமையாக குணமடைந்த அனைவருக்கும் பழங்கள் கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.
மற்ற 14 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் ஒரு வயது குழந்தையும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.