ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகரும், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நேற்று நள்ளிரவில் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து மக்கள் அதிகாரம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில்,
உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றுக்காக டெல்லி சென்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன், வழக்கை முடித்து விட்டு வரும் போது சென்னை விமான நிலையத்தில் 20-6-2018 அன்று இரவு 12 மணியளவில் மப்டியில் வந்த போலீசாரால் கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில் தூத்துக்குடி அழைத்து செல்லப்பட்டார்.
ஸ்டெர்லைட் பாதிப்பே பரவாயில்லை என நினைக்கும் அளவிற்கு தூத்துக்குடி மக்களுக்கு போலீஸ் தொல்லை, அச்சுறுத்தல் தொடர்கிறது. கிராம போராட்டக்குழுவினர் பலர் இன்றுவரை தலைமறைவாக உள்ளனர். கிராமங்களில் ஆண்கள், இளைஞர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது. பெண்கள் இரவில் போலீசுக்கு பயந்து மாதா கோவிலில் தங்குகின்றனர். உயர்நீதிமன்றம் இப்படி சட்ட விரோத கைதுகளை செய்யக்கூடாது என உத்தரவிட்டும் அதை மதிக்காமல் தொடர்ந்து போலீசார் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவிற்கு சட்ட உதவிகளை செய்ததற்காக பழிவாங்கும் நோக்கில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலர் வழக்கறிஞர் அரிராகவன் மீதும், மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதும் இருபதுக்கும் மேற்பட்ட பொய்வழக்குகளை புனைந்துள்ளனர். இதை அம்பலப்படுத்தி இருவரும் சமீபத்தில் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கமளித்தனர்.
வாழ்வுரிமைகளுக்காக போராடும் மக்களுக்கு சட்ட உதவிகளையும் போராட்டத்திற்கு ஆதரவு தருவது குற்றமல்ல. அது வழக்கறிஞர்களின் கடமை. அதற்காக கைது, சிறை, பொய் வழக்கு என்றால் அதை அனைவரும் ஒன்று திரண்டு போராடி முறியடக்க வேண்டும். நடப்பது போலீஸ் ஆட்சி, கிரிமினல்களின் ஆட்சி. சட்டம், நேர்மை, நியாயம், மக்கள் நலன் எதற்கு மதிப்பில்லை. போராட்டம் ஒன்றே தீர்வு. அதைதான் தூத்துக்குடி மக்கள் செய்தார்கள். தமிழக மக்களும் செய்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.