கம்யூனிஸ்ட் கட்சிகள் கொள்கையை விட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், ''பத்தாண்டுகள் எங்களுடைய அதிமுக ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டிருந்தது என்பதற்கு இப்போதைய தமிழக முதல்வரே சான்று. நமது முதலமைச்சரே ஒரு உண்மையை பேசி இருக்கிறார். இந்தியாவில் இருக்கக்கூடிய 100 பல்கலைக்கழகங்களில் ஏறத்தாழ அதிக பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் இருக்கிறது, சிறந்த கட்டமைப்பு வசதி இருக்கு, இந்தியாவிலேயே தனிநபர் வருமானம் அதிகம் பெறக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. அப்படி என்றால் இவையெல்லாம் ஒன்றை ஆண்டுகளில் வந்ததா இவை எல்லாம். பத்தாண்டுகளில் வந்தது என்று அவரே ஒப்புக்கொண்டார். ஓர் இறுக்கமான சூழ்நிலையில், நெருக்கமான சூழ்நிலையில் பத்தாண்டு காலம் நல்ல ஆட்சியைக் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. உலகமே கரோனாவால் பதற்றப்பட்டுக் கொண்டிருந்த சூழ்நிலையில், தமிழக மக்கள் எந்த விதமான கஷ்ட நஷ்டங்களும் படக்கூடாது, அவர்கள் வெளியே போகக்கூடாது, வெளியே போகாமல் அவர்களுடைய பொருளாதாரத்தை உயர்த்த என்ன செய்ய வேண்டும் சமையல் பொருள் இலவசமாக கொடுக்க வேண்டும், சமையல் பொருட்களை கொடுத்தால் மட்டும் போதுமா 2000 ரூபாய் கொடுக்கணும் என்று 2000 ரூபாய் கொடுத்தார்.
அதே காலகட்டத்தில் தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் வந்தது அதற்கு 2500 ரூபாய் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் அப்பொழுது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் என்ன சொன்னாரு ஐயாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று சொன்னார். நடக்கும் பிரச்சனைகள் பற்றி கம்யூனிஸ்டுகள் பேசுவதே இல்லை. இன்னும் ஒன்றரை வருடத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. ஒரு சில சீட்டுக்காக கம்யூனிஸ்ட் கட்சிகள் கொள்கையை விட்டு ரொம்ப நாள் ஆச்சு. சீட்டுக்காக மானம், ரோஷம் எல்லாத்தையும் விட்டுட்டு உண்டியல் குலுக்குவதை விட்டுவிட்டு திமுகவிடம் காசுக்கு கையேந்தி நிற்கிறார்கள். ஒரு காலத்தில் உண்டியல் என்றாலே கம்யூனிஸ்ட் என்று நியாபகம் வரும், கொள்கைவாதி என்று பெயர் எடுத்த கம்யூனிஸ்டுகள் பேசுவதே கிடையாது'' என்றார்.