ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இமயமலை சென்றிருந்தார். நான்கு நாட்கள் இமயமலையில் தியானம் செய்த அவர் பல்வேறு அரசியல் பிரமுகர்களையும் சந்தித்திருந்தார். இந்த நிலையில் சென்னை திரும்பிய ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''ஜெயிலர் திரைப்படத்தை வெற்றிப் படமாக்கிய படக்குழுவினர் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. ஜெயிலர் படத்தின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்'' என்றார்.
மேலும் 'யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் ''ஒரு சன்னியாசி ஆகட்டும்; ஒரு யோகி ஆகட்டும், அவர்கள் வயதில் நம்மை விட சிறியவர்களாக இருந்தால் கூட அவர்களுடைய காலில் விழுவது என்னுடைய பழக்கம். நான் அதைத்தான் செய்திருக்கிறேன்'' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் ரஜினிகாந்த்தின் இந்த பதில் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, ''ரஜினிகாந்த் யோகி காலில் விழுந்ததில் என்ன தவறு இருக்கிறது. ஒரு மனிதன் உன்னை மதிக்கின்றேன் உன்னுடைய ஆன்மீகத்தை நான் போற்றுகின்றேன் என்று சொல்ல வருவதை போன்றதுதான் இது. ரஜினி யோகியின் காலைத் தொட்டு வணங்கி அவருடைய அன்பை வெளிப்படுத்தினார். இதற்கு ரஜினி சாரே விளக்கம் கொடுத்துள்ளார். இதில் வேலையில்லாத சில கட்சிகள், சில வேலை இல்லாதவர்கள் தொட்டதெல்லாம் குற்றம் என பேச ஆரம்பித்தால் அதற்கு முடிவுதான் என்ன. அன்பின் மகேஷ் காலில் விழுந்து விட்டு ஒருவர் பத்து ரூபாய் வாங்குகிறார். நீங்க அந்த வீடியோ பார்த்திருப்பீர்கள். அது என்ன? அது மரியாதையில்லை கொத்தடிமை. திமுக தலைவர் ஸ்டாலின் காலில் அமைச்சர்கள் விழுந்து மரியாதை வாங்குகிறார்கள். உதயநிதியை விட 40 வயது மூத்த எம்.எல்.ஏ இடுப்பே உடையும் அளவிற்கு வளைகிறார். இதைப் பற்றி எல்லாம் திருமாவளவன் பேச மாட்டாரா? முற்றும் துறந்து ஆன்மீகத்திற்காகச் சேவையாற்றிக் கொண்டிருக்கும் யோகி ஆதித்யநாத் காலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விழுந்தது எந்த விதத்தில் தவறு'' என்றார்.
'ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து முதல்வராகியிருந்தால் தமிழ்நாட்டில் யோகி ஆட்சி நடந்திருக்கும் என திருமாவளவன் கூறியுள்ளாரே' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ''இங்க யோகி ஆட்சி நடந்தால் என்ன தவறு. பெண்களுக்கு பாதுகாப்பு இருந்திருக்கும். இந்த மாதிரி ரோட்டில் போகும் பெண்கள் எல்லாம் பயந்து பயந்து போக மாட்டாங்க. வெடிகுண்டு கலாச்சாரம் வந்திருக்காது. ஜாதி மோதல் வந்திருக்காது. இடுப்பை பிடித்து யாரும் கில்லி இருக்க மாட்டார்கள். உண்மைதான் யோகி ஆட்சி வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சிறப்பாக இருந்திருக்கும்'' என்றார்.