தர்மபுரி அருகே, கணித தேர்வின்போது ஆசிரியரே வினாத்தாளில் இருந்து கேள்விகளுக்கான பதில்களை பலகையில் எழுதி போட்டு, காப்பி அடிக்க வைத்த அவலம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பிக்கனஅள்ளியில் மாவட்ட ஆட்சியர் சாந்தி கடந்த செப். 28ம் தேதி, ஆய்வுக்குச் சென்று இருந்தார். அப்போது மல்லுப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அந்தப் பள்ளியில் காலாண்டு தேர்வு நடந்து கொண்டிருந்தது. அன்று கணித தேர்வு நடந்தது. தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவர்களிடம் வினாத்தாள் எளிமையாக இருந்ததா? தேர்வை எப்படி எழுதினீர்கள்? என்று ஆட்சியர் சாந்தி விசாரித்தார்.
அதற்கு மாணவர்கள் அனைவரும் சொல்லி வைத்தாற்போல, நன்றாக எழுதினோம். எல்லோரும் தேர்ச்சி அடைந்து விடுவோம் என்று உற்சாகமாக கூறினர். இதையடுத்து அவர் வினாத்தாளை வாங்கிப் பார்த்தார். அதில் உள்ள சில வினாக்களுக்கான விடைகளை மாணவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் பதில் தெரியாமல் பேந்த பேந்த என்று விழித்தனர். ஒருவருக்கும் பதில் தெரியவில்லை.
எல்லோரும் உரத்த குரலில் நன்றாக தேர்வு எழுதினோம் என்று சொன்னீர்கள். ஆனால் ஒருவருக்கும் கேள்விக்கான பதில் தெரியவில்லையே ஏன்? என்று வியப்பாக ஆட்சியர் கேட்டார். அப்போது மாணவர்கள், எங்கள் கணித ஆசிரியர் கேள்விக்கான விடைகளை கரும்பலகையில் எழுதி போட்டார். அதைப் பார்த்து தேர்வு எழுதினோம் என்று ஒரே குரலில் கூறினர்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆட்சியர் சாந்தி, இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரனுக்கு உத்தரவிட்டார். கணித தேர்வன்று நடந்த சம்பவம் குறித்தும், மாணவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்தும் ஒரு வார காலத்திற்குள் உரிய விளக்கம் அளிக்கும்படி கணித ஆசிரியருக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் தர்மபுரி மாவட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.