Skip to main content

''அவரது இறப்பு தவிர்த்திருக்கப்பட வேண்டியது'' - ஏ.வ. வேலு பேட்டி  

Published on 25/10/2022 | Edited on 25/10/2022

 

"it should be avoided" - AV Velu interview

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ. வேலு பேசுகையில், ''இன்று நான் நின்று பேசிக் கொண்டிருக்கக் கூடிய இடம் அயோத்தியதாசருக்கு மணிமண்டபம் கட்டக்கூடிய இடத்தில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறேன். முதல்வர் 110 விதியின் கீழ் 2021-22 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அயோத்திதாசருக்கு சென்னை வடபகுதியில் மணிமண்டபத்தை கட்டுகிறோம் என்று அறிவித்திருந்தார். அதற்கு பின்னால் விமான நிலையத்திற்கு பல்வேறு பணிகள் சார்பாக இந்த வழியாக போகின்ற பொழுது அவர் மீண்டும் எங்கள் துறையை அழைத்து சட்டமன்றத்தில் ஏற்கனவே வடசென்னை பகுதியில் அயோத்தியதாச பண்டிதருக்கு மணிமண்டபம் கட்டுவதாக குறிப்பிட்டிருக்கிறோம். ஆனால் இந்தப் பகுதியில்தான் பெருந்தலைவர் காமராஜரின் மணிமண்டபம், பக்தவச்சலத்தின் மணிமண்டபம், ராஜாஜி மணிமண்டபம், காந்தி மணிமண்டபம், மொழிப்போர் தியாகிகளுடைய மணிமண்டபம், ரெட்டைமலை சீனிவாசன் மணிமண்டபம் எல்லாம் அமைந்திருக்கிறது. எனவே அந்த தலைவர்கள் வரிசையில் இங்கேயே அவருக்கு மணி மண்டபத்தை கட்டலாம் என்று உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் இந்த இடத்தை நாங்கள் தேர்வு செய்தோம். 2 கோடியே 48 லட்சம் ரூபாயில் மணிமண்டபம் கட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது'' என்றார்.

 

அப்பொழுது செய்தியாளர்கள் தனியார் தொலைக்காட்சி ஊழியர் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், ''செய்தியாளர் முத்துகிருஷ்ணன் இறந்தது வருத்தத்திற்குரிய நிகழ்வு. அன்பு சகோதரர் இறந்துவிட்டார் என்று மனதளவில் கூட நான் வருத்தப்படுகிறேன். இன்னும் சொல்லப் போனால் சம்பந்தப்பட்ட ஊடக நண்பர்களை தொடர்பு கொண்டு என்னுடைய வருத்தத்தை நான் பகிர்ந்து கொண்டேன். பொதுவாக ஏட்டிக்கு போட்டியாக சொல்லவில்லை. இங்கு இரண்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு கார்ப்பரேஷன் மூலமாகவும் பணிகள் நடைபெற்று வருகிறது நெடுஞ்சாலைத்துறை மூலமாகவும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிமிடம் வரை அவர் எந்த இடத்தில் விழுந்தார் என்று யாராலும் சொல்ல முடியவில்லை. விசாரணை போய்க்கொண்டிருக்கிறது. திருவண்ணாமலையில் இருந்த நான் மறுநாள் காலையிலேயே அந்தப் பகுதியில் பணிகளை எல்லாம் ஆய்வு செய்த பொழுது அவர் விழுந்ததாக சொல்லப்பட்ட இடங்களில் எல்லாம் ஏற்கனவே மேலே ஸ்லாப் போட்டு மூடப்பட்டு விட்டது. நெடுஞ்சாலைத்துறையை பொறுத்தவரை நான் இப்பொழுதே கூட்டிச் சென்று காட்டத் தயாராக இருக்கிறேன். நெடுஞ்சாலைத்துறை பணிகளில் நாங்கள் பேரி கார்ட் எல்லாம் வைத்து, இங்கு நெடுஞ்சாலை பணி நடைபெறுகிறது என்று சொல்வதோடு விபத்து வராத அளவிற்கு பாதுகாப்பாக அறிவிப்புகள் எல்லாம் வைத்திருப்போம்.

 

பாதுகாப்பு என்ற அடிப்படையில் ஒருமுறைக்கு பலமுறை ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் தொடர்ந்து அறிவுறுத்தியதின் அடிப்படையில் மாநகராட்சியாக இருந்தாலும் சரி நெடுஞ்சாலைத்துறையாக இருந்தாலும் சரி பாதுகாப்புப் பணியை பொறுத்தவரை நாங்கள் பேரி கார்ட் வைக்காமல், நெடுஞ்சாலைத்துறை பணி நடைபெறுகிறது என்று போர்டு வைக்காமல் நாங்கள் வேலை செய்வது கிடையாது. அதை நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். எது எப்படி இருந்தாலும் இரவு நேரத்தில் நிகழ்ந்த சம்பவம் இதுவரை விசாரணை போய்க்கொண்டிருக்கிறது. நாங்களும் காவல்துறையை கூப்பிட்டு சிசிடிவி காட்சிகளையும் சோதனை செய்யச் சொல்லி இருக்கிறோம். ஆனால் கூட அதை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. அவரது இறப்பு என்பது வருத்தத்திற்குரியது. அவரது இறப்பு தவிர்த்திருக்கப்பட வேண்டியது. ஆனால் இது கேள்விப்பட்ட உடனே தமிழக முதல்வர் முத்துகிருஷ்ணன் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் தர வேண்டும் என அறிவித்துள்ளார்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்