சேலத்தில் ஒரே நேரத்தில் 6 தனியார் அரிசி ஆலையில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதால் ஆலை அதிபர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
சேலம் மாநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட தனியார் அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலை அதிபர்கள், தமி-ழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் நெல் கொள்முதல் செய்து, அவற்றை அரைத்து அரிசியாக்கி சந்தைப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சில முன்னணி தனியார் அரிசி ஆலைகள் பல கோடி ரூபாய் வரை வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமானவரித்துறைக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.
கோவை மண்டல வருமானவரித்துறை இணை ஆணையர் தலைமையில் முப்பதுக்கும் மேற்பட்ட வருமான வரி அலுவலர்கள், செவ்வாய்க்கிழமை (மார்ச் 5) சேலத்திற்கு வந்தனர். அக்குழுவில் இருந்த சில அதிகாரிகள், சேலத்தை அடுத்த திருமலைகிரியில் இயங்கி வரும் ஷியாமளன் மாடர்ன் ரைஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற தனியார் அரிசி ஆலையில் திடீரென்று சோதனை நடத்தினர்.
மற்ற சில குழுவினர் பிரிந்து சென்று, சேலம் நெத்திமேடு பகுதியில் இயங்கி வரும் இரண்டு அரிசி ஆலைகள், மன்னார்பாளையத்தில் ஒரு அரிசி ஆலை என ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஆறு தனியார் அரிசி ஆலைகளில் சோதனை நடத்தினர்.
அரவைக்காக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் விவரம், கடந்த சில ஆண்டுகளாக நடந்த வர்த்தக மதிப்பு, வருமானவரி செலுத்திய பதிவேடுகள் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனர். மாலை வரை வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
வருமானவரித்துறை அதிகாரிகளின் திடீர் சோதனையில் அரிசி ஆலை அதிபர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.