!['It is my duty to develop the BJP - Annamalai interview](http://image.nakkheeran.in/cdn/farfuture/aGlN3UnGPujgFr2HczgJ9HKHv7iENz3lyW62FJHSgjM/1680436327/sites/default/files/inline-images/nm89.jpg)
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் 'பாஜக கூட்டணியில் அதிமுக இருப்பதாக அமித்ஷா கூறியுள்ளது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, ''சிலர் இந்தி படிக்க வேண்டும். அமித்ஷா சொன்ன கருத்துக்களை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்தி படித்திருக்க வேண்டும். இந்தி புரிந்திருக்க வேண்டும். நான் பத்திரிகையை நண்பர்களை குறையாக சொல்லவில்லை. அவர் என்ன பார்வையில் சொன்னார் என்று தெரியும். கூட்டணி எப்படி இருக்க வேண்டும்; எப்படிப் போக வேண்டும் என்பதில் மாநில தலைவராக ஒரு விஷயத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். நாம் எந்த பாதையில் போனாலும் அதில் பாஜகவினுடைய வளர்ச்சி இருக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். அதற்காகத்தான் தலைவராக இருக்கிறேன். தலைவராக இந்த கட்சியை வளர்த்து கொடுத்துவிட்டு செல்வது என்னுடைய கடமை. அமித்ஷாவின் பதிலை முழுமையான அர்த்தத்துடன் புரிந்து கொள்ள வேண்டும். கூட்டணி முடிவு என்பது அமித்ஷா, நட்டா, நாடாளுமன்ற போர்ட் ஆகியவர்களின் கருத்துக்களுக்கு உட்பட்டது.
ஒரு இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அமித்ஷாவிடம் தனியாக பேசிவிட்டு வந்திருக்கிறேன். பல கருத்துக்களைப் பேசிவிட்டு வந்திருக்கிறேன். அது எனக்கும் அமித்ஷாவிற்கும் இருக்கக்கூடிய கருத்துக்கள். அதனை பத்திரிகை மூலமாக வெளியே பேசுவது நல்லா இருக்காது. அதில் தமிழகம் சார்பாக பல முக்கிய விஷயங்களையும், பாஜக எப்படி செல்ல வேண்டும்; தொண்டர்களுடைய விருப்பம் என்ன; தலைவர்களின் விருப்பம் என்ன; 2024 எப்படி இருக்கும்; 2026 எப்படி இருக்கும்; 2030 எப்படி இருக்கும்; தமிழக அரசியல் சூழல் எப்படி மாறி வருகிறது என பல கருத்துக்களைப் பேசியுள்ளோம். அதே நேரத்தில் எப்பொழுதுமே, எங்கேயுமே அவர்கள் நமது கூட்டணியில் இல்லை என்ற கருத்தை நான் சொல்லவில்லை. இன்றைக்கும் அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் மிக முக்கிய அங்கமாக இருக்கிறது. எந்த கட்சியின் மீதும் பாஜகவுக்கு கோபம் இல்லை''என்றார்.