‘லட்சாதிபதி ஆக வேண்டுமா..? இப்போதே இணையுங்கள் ஆன்லைன் ரம்மி விளையாட்டில்" இந்த வாசகங்களுடன் கூடிய கண்கவர் விளம்பரங்களைத் தினந்தோறும் காணாதோர் இருக்க முடியாது. சமூகவலைதளங்கள், எஸ்.எம்.எஸ்., தொலைக்காட்சி விளம்பரங்கள் என எங்கு பார்த்தாலும் பணத்தாசையைத் தூண்டும் இந்த விளம்பரங்கள் பளிச்சென கண்ணில்படும். இப்படி அனைத்து தளங்களிலும் எட்டிப்பார்க்கும் இந்த விளம்பரங்களைப் பலர் சாதாரணமாகக் கடந்து சென்றுவிடுவதுண்டு. ஆனால் சிலர், பணம் மீதான ஆசை காரணமாகவோ, தேவை காரணமாக இதனுள் சென்று சிக்கிக்கொள்வதுண்டு. ஆசைக்காக விளையாட்டாக ஆரம்பிக்கும் இது, ஒருகட்டத்தில் இதில் சிக்கியவர்களைக் கடனாளியாக்கி, மன அழுத்தத்தை ஏற்படுத்தி, இறுதியில் உயிரை மாய்த்துக்கொள்வது வரை கொண்டுவிட்டுவிடுகிறது. இப்படி இந்த சூதாட்டத்திற்கு இரையான குடும்பங்கள் ஏராளம்.
இப்படி பல தற்கொலை நிகழ்வுகளுக்குப் பின் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டம் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் ஆங்காங்கே சட்டத்திற்கு புறம்பாக விளையாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்நிலையில் சென்னையில் ஆன்லைன் ரம்மி மூலம் பணத்தை இழந்த இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மணலி புதுநகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் பவானி. ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ரயிலில் தினமும் வேலைக்கு செல்லும்பொழுது பொழுதுபோக்கிற்காக ஆன்லைன் ரம்மி விளையாண்டுள்ளார். காலப்போக்கில் அந்த விளையாட்டுக்கு பவானி அடிமையானதாக கூறப்படும் நிலையில், 20 சவரன் நகையை விற்றதோடு சகோதரியிடம் 30 லட்சம் ரூபாய் கடன் வாங்கி ரம்மி விளையாடியுள்ளார். இதில் ஏற்பட்ட இழப்பு காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் பவானி. ஆன்லைன் ரம்மியால் ஐ.டி பெண் ஊழியர் தற்கொலை செய்துகொண்டது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.