
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள ஆவிச்சுப்பட்டி கிராமத்தில் மலை அடிவாரத்தில் வெடி தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் நேற்று இருவர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் அதே நத்தம் பகுதியில் குடியிருப்பு பகுதியின் அருகே நாட்டு வெடிகுண்டுகள் கிடந்த சம்பவம் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நத்தம் செந்துறை ரோடு அருகில் ஆர்.சி மேல்நிலைப்பள்ளி அருகே உள்ளது கலைநகர் குடியிருப்பு. இந்த குடியிருப்பு பகுதிக்கு ஒட்டியுள்ள புதர் பகுதியில் சணல் கயிற்றால் சுற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் கிடந்தது. காலை நேரத்தில் அந்த பகுதியில் வேலைக்கு சென்றவர்கள் இதனை பார்த்துள்ளனர். நாட்டு வெடிகுண்டுகள் கிடந்தது அந்த பகுதியில் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சுமார் 20க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் அங்கு கிடைப்பதைக் கண்டு அச்சமடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் காவல் ஆய்வாளர் தங்க முனியசாமி தலைமையிலான போலீசார் சிதறிக் கிடந்த நாட்டு வெடிகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.