கர்நாடகா மாநிலம், காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் காவிரியில் நீர் வளர்த்து அதிகரித்துள்ளது. கரூர் மாவட்டம், மாயனூரில் உள்ள காவிரி ஆற்றின் கதவணைக்கு வினாடிக்கு 1,15,400 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து 1,14,400 கன அடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. பாசனத்திற்காக கட்டளை மேட்டு வாய்க்காலில் 200 கன அடியும், புதிய கட்டளை கேட்டு வாய்க்காலில் 400 கன அடியும், தென்கரை வாய்க்காலில் 400 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கரூர் மாநகராட்சியில் மாயனூர் கதவனை ஒட்டி உள்ள கட்டளை பகுதியில் நீர் சேகரிப்பு கிணறுகள் அமைந்துள்ளன. இங்கிருந்து நீர் சேகரிக்கப்பட்டு மாநகராட்சி பகுதியில் உள்ள தான்தோன்றி மலை பகுதிக்கு வழங்கப்படுகிறது. காவிரியில் அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் மாநகராட்சி நீர் சேகரிப்பு கிணறுகளுக்கான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
இதனால், குடிநீர் முறையாக வழங்கப்படாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் ஆகியோர் கட்டளை பகுதிக்கு சென்றனர். நீர் சேகரிப்பு கிணறு அர்ய்கே செல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் அதிக அளவில் சென்று கொண்டிருந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் பரிசலில் நீர் சேகரிக்கும் கிணறு பகுதிக்கு சென்றனர்.
பின்னர், மின் இணைப்பு கொடுக்க முடியாத நிலையில் டீசல் கொண்டு ஜெனரேட்டர்களை இயக்கி குடிநீர் வழங்க உத்தரவிட்டனர். இதற்காக பரிசல் மூலம் கேன்களில் டீசல் கொண்டு செல்லப்பட்டு ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டன. இன்று மாலைக்குள் முழுமையாக குடிநீர் வழங்க அனைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேயர் கவிதா கணேசன் தெரிவித்தார்.