
பட்டியல் இனத்தினருக்கு எதிராகப் பேசியதாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில், பட்டியல் இனத்தவர்கள் குறித்து கருத்து தெரிவித்ததாகக் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக, ஆதித் தமிழர் மக்கள் கட்சி சார்பில் அளிக்கப்பட்டப் புகாரில், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. சென்னை - தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, பின்னர் மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதை அடுத்து, கடந்த மே மாதம் ஆர்.எஸ்.பாரதி, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
சென்னையில் உள்ள எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்குத் தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், ‘நான் முதலமைச்சர் மற்றும் தமிழக அமைச்சர்களுக்கு எதிராகப் புகார் அளித்துவருவதால், அதற்குப் பழிவாங்கும் நோக்கத்துடன், இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசியல் உள்நோக்கத்தோடு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதால், இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். வழக்கு குறித்து மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.