
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் வருகை தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என அக்கட்சியின் மாநிலத்தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
அமித் ஷாவின் வருகை தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும். தாமரை மலராது, தமிழக பாஜகவில் என்ன இருக்கிறது என்று சொல்பவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிகழ்ச்சியாக அமையும். பாஜக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் கட்சி. பல எம்எல்ஏக்களைப் பெற்று தோல்வியடைந்த கட்சி போல் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
தமிழக அளவில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பேசப்படும் நிகழ்ச்சியாக இருக்கும். பணம் கொடுத்து யாரையும் அழைத்து வர மாட்டோம். எங்கள் நிர்வாகிகளை மட்டுமே அழைத்திருக்கிறோம். தமிழகத்தில் வேறு கட்சிகளால் இதனைச் செய்ய முடியாது.
யாரை வேண்டுமானாலும் அழைத்துக் கூட்டத்தைக் கூட்டுவது எங்கள் நோக்கமல்ல. வெளித் தோற்றத்திற்காக அல்ல. கட்சியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ளும் மாபெரும் நிகழ்ச்சி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.