கொரோனா தொற்றுக்கு எதிராக அரசு எடுத்த ஊரடங்கு, தடுப்பூசி உள்ளிட்டவற்றால் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக மீண்டும் கொரோனா தொற்று இந்தியாவில் அதிகரிக்க துவங்கியுள்ளது. அதேபோல், தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று அதிகரித்துவருகிறது. நேற்று ஒரே நாளில் 3,766 பேரிடம் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் 156 பேருக்கு தொற்று உறுதியானது.
இந்நிலையில், உதகையில் இன்று நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்துகொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கோவையில் ஆயிரம் படுக்கை வசதி தயார் நிலையில் உள்ளன. அதேபோல், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. வெளிநாடுகளில் இருந்து வரக்கூடியவர்களிடம் நடத்தப்படும் பரிசோதனைகளில் தொற்று அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பரிசோதனையில் தொற்று உறுதியானவர்களை வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.