குளத்தூர், அரசு உயர்நிலைப்பள்ளி, முன்னாள் மாணவர் பர்ஜித் மற்றும் ஆசிரியர்கள் கொடுத்த தகவலின் பேரில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், குளத்தூரில் துணி துவைக்கப் பயன்படுத்திய கல்லில் இருந்த கல்வெட்டை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு படித்து ஆய்வு செய்து, கி.பி.1638-ம் ஆண்டு, இரண்டாம் சடைக்கத் தேவர் என்ற தளவாயான் சேதுபதி மன்னர் குளத்தூர் கண்மாயில், குமிழி மடையை அமைத்துத் கொடுத்ததை தெரிவிக்கும் கல்வெட்டு எனக் கூறியிருந்தார்.
கல்வெட்டை தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும் என பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் கோரியிருந்தது. அதன் பேரில் இன்று இக்கல்வெட்டு ராமநாதபுரம் தொல்லியல் துறை, ராமலிங்க விலாசம் அரண்மனை அகழ்வைப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தொல்லியல் அலுவலர் சுரேஷ், குளத்தூர் கிராம நிர்வாக அலுவலர் க.தமிழரசி, ஊராட்சி மன்றத் தலைவி பா.நாகலட்சுமி, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, ஆசிரியர் பால்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.