இந்தியாவில் சிறந்த பத்து காவல் நிலையங்களில் தேனி அனைத்து மகளிர் காவல்நிலையம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
அந்தமானில் உள்ள அபெர்தீன் காவல் நிலையம் முதலிடத்தை பிடித்தது. 2- வது இடத்தை குஜராத் மாநிலத்தின் பாலசினார் காவல் நிலையமும், 3- வது இடத்தை மத்திய பிரதேசத்தின் அஜிக் புர்ஹன்பூர் காவல் நிலையமும் பிடித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம், 2019- ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையங்கள் குறித்து இந்தியா முழுவதும் ஆய்வு செய்தது. அதைத் தொடர்ந்து நவம்பரில் மத்திய அரசு அதிகாரி தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தை ஆய்வு செய்தார். அங்கு ஒரு இன்ஸ்பெக்டர், இரண்டு எஸ்.ஐ.க்கள், 30 போலீசார் இருந்தனர். அதுபோல் காவல் நிலையத்தின் ஆவணங்கள், நீதிமன்ற ஆவணங்கள், புகார்கள் மீதான விசாரணை, மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தள வசதி, சுற்றுச்சூழல், குடிநீர் போன்ற வசதிகள் சிறபபாக இருந்ததால், இந்த அனைத்து மகளிர் காவல்நிலையத்தை இந்திய அளவில் நான்காவது சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்தனர்.
இது சம்மந்தமாக தேனி எஸ்.பி.சாய்சரண்தேஜஸ்வி பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, ஆய்வுக்கு வந்த அதிகாரி பொதுமக்களிடமும், கருத்துக்களை கேட்டு தேர்வு செய்துள்ளார். இந்த அனைத்து மகளிர் காவல்நிலையத்தை ஆண், பெண்ணிற்கு என தனி கைதி அறைகள் போலீசார் ஓய்வு அறை, சிறந்த சுற்றுச்சூழல் வசதிகள் உள்ளது. அதுபோல் போலீஸ் அதிகாரிகள் ஒத்துழைப்பும், பொதுமக்களின் நன்மதிப்பும் விருது பெறுவதற்கு காரணமாக இருந்திருக்கிறது.
இதுபோல் மாவட்டத்தில் உள்ள மற்ற போலீஸ் ஸ்டேசன்களையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், அதோடு அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர் திலகம் மற்றும் மகளிர் போலீசார்களையும் பாராட்டுகிறேன் என்று கூறினார். இப்படி துணை முதல்வரின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையம் இந்திய அளவில் நான்காவது இடத்தை பிடித்து சாதனை படைத்து இருக்கிறது.