மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் வீடுகளில் நேற்று காலை 7:00 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். தொடர்ச்சியாக, கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் வீட்டில் சோதனையிட வருமானவரித் துறையினர் வந்தனர்.
அப்போது துணை மேயர் தாரணி சரவணன் வீட்டில் அவரது மனைவி மற்றும் மகன் மட்டுமே இருந்துள்ளனர். அவர்கள் சோதனைக்கு ஒத்துழைக்கவில்லை எனக் கூறி வருமானவரித் துறை அதிகாரிகள் துணை மேயரின் வீட்டிற்கு சீல் வைத்து அதற்கான நோட்டீஸை அவரது வீட்டின் வாசலில் ஒட்டியுள்ளனர். இந்த விவகாரம் அறிந்து அங்கு வந்த துணை மேயரின் ஆதரவாளர்கள், வருமானவரித் துறை அதிகாரிகளை அங்கிருந்து செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
துணை மேயர் வீட்டின் வெளியே அவரது ஆதரவாளர்கள், வருமானவரித் துறை அதிகாரிகளை செல்லவிடாமல் தடுத்து நிறுத்திய சம்பவம் காவல்துறைக்கு தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏ.டி.எஸ்.பி. கண்ணன் தலைமையிலான போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடமும், வருமானவரித் துறை அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதன்பின் துணை மேயரின் வீட்டு கேட்டில் ஒட்டப்பட்ட சீல் வைத்தற்க்கான நோட்டீசை அகற்றி அதனை துணை மேயரின் மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு, வருமானவரித் துறை அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர். துணை மேயர் தாரணி சரவணன் நேற்று மதியம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.