விளாத்திகுளம் அருகே அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவரை, சமையலர் பெண்மணி கத்தியால் குத்த முயன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. விளாத்திகுளம் அருகே உள்ள மந்திக்குளத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.
இங்கு சில நாட்களுக்கு முன்னர் ஆய்வு நடத்திய கல்வி அதிகாரிகள், மாணவர்களுக்கு தரமான சத்துணவு வழங்கவில்லை என சமையலர் மீனாட்சியை கடிந்து கொண்டதாக தெரிகிறது. மேலும், சத்துணவு தயாரிக்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களும் மழையில் நனைந்து சேதமடைந்து இருந்ததால், சமையலர் மீனாட்சியை அதிகாரிகள் திட்டியுள்ளனர். இதற்கு அந்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றும் கலைச்செல்விதான் காரணம் என அவருடன் மீனாட்சி வாக்குவாதம் செய்துள்ளார்.
கடந்த 4 நாட்களாக அவர்களுக்கு இடையே பனிப்போர் நீடித்த நிலையில், இன்று நண்பகல் மீண்டும் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆசிரியை கலைச் செல்வியை சமையலர் மீனாட்சியை கத்தியால் குத்த முயன்றதாக தெரிகிறது.
அவரிடம் இருந்து தப்பிய ஆசிரியை, வகுப்பறைக்குள் புகுந்து கதவை மூடிக் கொண்டதால். உயிர் தப்பி உள்ளார். அப்போதும் ஆவேசம் குறையாத சமையலர் மீனாட்சி, ஆசிரியை கலைச் செல்வியின் இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கி சேதப்படுத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதுகுறித்து ஆசிரியை அளித்த புகாரின் பேரில், விளாத்திகுளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.