தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள முத்தலாபுரத்தை சேர்ந்த ஜெய்சங்கர்-ரேவதி தம்பதியின் மகன் நகுலன் (வயது06) நேற்று மாலை முதல் காணாமல் போய்விட்டான். பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்தும், அவனைப்பற்றி தகவல் கிடைக்கவில்லை என்பதால், எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதே ஊரைச் சேர்ந்த அருள் ராஜ் என்பவர் மீது, சந்தேகம் இருப்பதாகவும் பெற்றோர் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
அருள்ராஜை பிடித்து போலீஸார் விசாரித்தபோது, எனக்கு எதுவும் தெரியாது என சாதித்துள்ளான். பின்னர் "நான் தான் கொலை செஞ்சேன். பாடியை எங்கே போட்டேன்னு தெரியலை?" என கூறியுள்ளான். இதற்கிடையே, குற்றவாளியை தப்பவைக்க போலீஸார் முயல்வதாக கூறி, சிறுவனின் உறவினர்களும், பொதுமக்களும் மதுரை-தூத்துக்குடி நெடுஞ்சாலையில் கோட்டூர் விலக்கில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதனால், பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்க, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே, போலீஸார் தங்களது பாணியில் அருள்ராஜிடம் விசாரிக்க, "அந்த பையன் பாடி, அந்த புதருக்குள்ள தான் கிடக்குது நல்லா தேடிப் பாருங்க.."என உண்மையை உலறிக் கொட்டியிருக்கிறான். அவன் சொன்ன இடத்தில் சிறுவன் நகுலனின் சடலத்தை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாக பேசி வருவதால், அருள் ராஜிடம் தனிப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.